|
24. |
கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சம்என்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்மிருக் குஞ்சென்னி ஈசனுக்கே. | 1 |
|
25. |
ஈசன் அவன்அல்லா தில்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான். | 2 |
|
26. |
பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்
டிரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே. | 3 |
|
27. |
அந்தணனைத் தஞ்செமென் றாட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
பொன்கண்டாற் பூணாதே கோள்நாகம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி. | 4 |
|
28. |
இனிவார் சடையினிற் கங்கையென் பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகை யிற்சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயில்முழ்கத்
தனிவார் கணைஒன்றி னால்மிகக் கோத்தஎஞ் சங்கரனே. | 5 |
|
29. |
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாவென் றாழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை. | 6 |
|
30. |
உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு கேட்கிற்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றும் தொடேல்இழிந் தோட்டந்தெங்கும்
திரைக்கின்ற கங்கையும் தேன்நின்ற கொன்றையும் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் தலைவைத்த வேதியனே. | 7 |
|
31. |
வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ். | 8 |
|
32. |
கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன்எண் தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளும் தலைநின்மினே. | 9 |
|
33. |
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினஉணர்ந்தோர்காண்பர் - தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல். | 10 |
|
34. |
கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்து நில்லா வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச் செம் மேனிஎம் மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்மடுந் தொல்வினையே. | 11 |
|
35. |
தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும்- மெல்லியல்ஓர்
கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை. | 12 |
|
36. |
நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கோர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையும் தேறியோர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன்நந் தாதைநொந் தாதசெந்தீ
அனையான் அமரர் பிரான்அண்ட வாணன் அடித்தலமே. | 13 |
|
37. |
அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தில்
ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ. | 14 |
|
38. |
நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் றிரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதந் தொழச்செய்யும் மொய்கழற் புண்ணியனே. | 15 |
|
39. |
புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு. | 16 |
|
40. |
அன்பால் அடைவதெவ் வாறுகொல் மேலதோர் ஆடரவம்
தன்பால் ஒருவரைச் சாரஒட் டாதது வேயும்அன்றி
முன்பா யினதலை யோடுகள் கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர் ஏறுகந் தேறுவதே. | 17 |
|
41 |
ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு. | 18 |
|
42 |
தமக்கென்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாம்ஒருநாள்
எமக்கொன்று சொன்னால் அருளுங்கொ லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெள்ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய்
உமைக்கென்று தேடிப் பெறாதுட னேகொண்ட உத்தமரே. | 19 |
|
43. |
உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரம்அடுக்கித் தீயாமுன் - உத்தமனாம்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து. | 20 |
|
44. |
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர். | 1 |
|
45 |
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு. | 2 |
|
46 |
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற்
பாகப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். | 3 |
|
47 |
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை. | 4 |
|
48. |
இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான். | 5 |
|
49 |
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான். | 6 |
|
50. |
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். | 7 |
|
51 |
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அ·தன்றே யாமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள். | 8 |
|
52 |
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு. | 9 |
|
53 |
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனிக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே யெனக்கரிய தொன்று. | 10 |
|
54. |
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது. | 11 |
|
55. |
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்
அதுவே இனியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியா ரொண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு. | 12 |
|
56. |
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லேபாவந் தான். | 13 |
|
57. |
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து. | 14 |
|
58. |
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வார் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி. | 15 |
|
59. |
இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண். | 16 |
|
60. |
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன். | 17 |
|
61 |
அரனென்கோ நான்முகன் என்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்
தானவனைப் பாதத் தணிவிரலாற் செற்றானை
யானவனை எம்மானை இன்று. | 18 |
|
62 |
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு. | 19 |
|
63 |
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன். | 20 |
|
64. |
அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து. | 21 |
|
65. |
வந்திதனைக் கொள்வதே யொக்கும்இவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ- வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை. | 22 |
|
66. |
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது. | 23 |
|
67 |
இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. | 24 |
|
68 |
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று. | 25 |
|
69 |
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு. | 26 |
|
70. |
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண். | 27 |
|
71. |
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக இவர். | 28 |
|
72. |
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர் -இவர் தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர். | 29 |
|
73. |
பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே
பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து. | 30 |
|
74. |
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு. | 31 |
|
75. |
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல். | 32 |
|
76. |
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுவந்த
தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம். | 33 |
|
77. |
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை அடும். | 34 |
|
78 |
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி யிருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு. | 35 |
|
79. |
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி. | 36 |
|
80. |
மதியா அடலவுணர் மாமதில்மூண் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு. | 37 |
|
81 |
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு. | 38 |
|
82 |
கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன்
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து. | 39 |
|
83 |
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு. | 40 |
|
84 |
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து. | 41 |
|
85 |
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ
இளங்குழவித் திங்கள் இது. | 42 |
|
86 |
திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
தானே அறிவான் தனக்கு. | 43 |
|
87 |
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான். | 44 |
|
88. |
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது. | 45 |
|
89 |
எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்
றெந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம். | 46 |
|
90 |
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு. | 47 |
|
91 |
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா
ததுமதியொன் றில்லா அரா. | 48 |
|
92 |
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரியஓடி - விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே யொப்பான் சடை. | 49 |
|
93 |
சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோல மதிவைத்தான்தன் பங்கின்
குலப்பாவை நீலக் குழல். | 50 |
|
94. |
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்
தெழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு. | 51 |
|
95 |
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர். | 52 |
|
96. |
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - பேரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார். | 53 |
|
97 |
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோ டுழிதருவான் - நீருருவ
மேகத்தாற்செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு. | 54 |
|
98 |
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவு மன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியி னுள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு. | 55 |
|
99 |
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
புலாற்றலையின் உள்ளுண் புறம்பேசக் கேட்டோ
நிலாத்தலையிற் சூடுவாய் நீ. | 56 |
|
100 |
நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடஅரவம் மேலாட மிக்கு. | 57 |
|
101 |
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு. | 58 |
|
102 |
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவ மேல். | 59 |
|
103 |
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று. | 60 |
|
104 |
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது. | 61 |
|
105 |
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா
தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு. | 62 |
|
106 |
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா. | 63 |
>
|
107 |
நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று. | 64 |
|
108 |
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு. | 65 |
|
109 |
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு. | 66 |
|
110 |
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தூங்குதலால் - ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு. | 67 |
|
111 |
சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்
றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி. | 68 |
|
112 |
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோங் கூற்றைப் - படிமேற்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனிஅவலம் உண்டோ எமக்கு. | 69 |
|
113 |
எமக்கிதுவோ பேராசை யென்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம். | 70 |
|
114 |
இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப் பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண். | 71 |
|
115 |
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும்
கண்ணாளா ஈதென் கருத்து. | 72 |
|
116 |
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலஞ் சிக்கென நான்சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீ ரேற்றேன் அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது. | 73 |
|
117 |
ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏது நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கமலம். | 74 |
|
118 |
கலங்கு புனல்கங்கை ஊடால லாலும்
இலங்கு மதிஇயங்க லாலும் - நலங்கொள்
பரிசுடையான் நீண்முடிமேற் பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு. | 75 |
|
119 |
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி. | 76 |
|
120 |
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு. | 77 |
|
121 |
அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. | 78 |
|
122 |
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு. | 79 |
|
123 |
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள்
அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால். | 80 |
|
124 |
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து. | 81 |
|
125 |
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் - தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின். | 82 |
|
126 |
மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது. | 83 |
|
127 |
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினில்அழியக்
கண்டாலும் முக்கணான் கண். | 84 |
|
128 |
கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின். | 85 |
|
129 |
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ
துறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய
நற்கணத்தி லொன்றாய நாம். | 86 |
|
130 |
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள். | 87 |
|
131 |
இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி. | 88 |
|
132 |
ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவா ய·திருப்ப உன்னுடைய கண்டமிருள்
கொண்டவா றென்இதனைக் கூறு. | 89 |
|
133 |
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித் திட்
டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை. | 90 |
|
134 |
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறம்உரைப்ப தென். | 91 |
|
135 |
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையோன் வானோர்க்
கருளாக வைத்த அவன். | 92 |
|
136 |
அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன் கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. | 93 |
|
137 |
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள். | 94 |
|
138 |
அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ
றென்பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமின்இங் கார். | 95 |
|
139 |
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை அதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து. | 96 |
|
140 |
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக் கொண்டாயோ - நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்
களைந்தெழுந்த செந்தீ யழல். | 97 |
|
141 |
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாயிதனைக் செப்பு. | 98 |
|
142 |
செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன்
றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய
நாகத்தா யாடுன் நடம். | 99 |
|
143 |
நடக்கிற் படிநடுங்கும் நோக்கிற் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கற்
பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னே
றுருமேறோ ஒன்றா உரை. | 100 |
|
144 |
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து. | 101 |