11th tirumuRai collections

(825 pAcurams of several authors)
(in tamil script, unicode format)


பதினோராந் திருமுறை (நம்பியாண்டார் நம்பி தொகுப்பு)
பாசுரங்கள் 145-168

3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாசுரங்கள் (145 -168)

3.1 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிச் செய்த
திருக்கோயில் திருவெண்பா (§க்ஷத்திரத் திருவெண்பா) (பாசுரங்கள் 145- 168)

145.

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று -நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

1
146

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்த
பாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

2
147

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.

3
148.

காளை வடிவொழிந்து கையுறவோ டையுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் - பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆருரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.

4
149

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.

5
150

காலைக் கலையிழையாற் கட்டித்தன் கையார்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி - மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.

6
151.

மாண்டுவாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே
வேண்டுவாய் ஆகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்
தென்னிடைவாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.

7
152.

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.

8
153

அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு.

9
154

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்
டோடேந்தி உண்ப துறும்.

10
155

குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாம் - தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
தென்னானைக்கா அடைநீ சென்று.

11
156

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.

12
157.

காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.

13
158.

இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.

14
159

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.

15
160.

இட்ட குடிநீர் இருநாழி ஓருழக்காச்
சட்டஒரு முட்டைநெய் தான்கலந் - தட்ட
அருவாச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர்.

16
161

கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா வண்ணம் - அழிந்த
திராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்.

17
162

இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவிவிடா முன்னம் - மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.

18
163

உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.

19
164.

என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வன்னெஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு.

20
165

கரம்ஊன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரம்ஊன்றி வாய்குதட்டா முன்னம் - புரம்மூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.

21
166.

தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்
டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின்.

22
167

நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவங் கேட்ட பகல்.

23
168.

உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

24

திருச்சிற்றம்பலம்

This web page last revised on 14 March 2002

Back to 11th thirumuRai Page
Back to thirumuRai Page
Back to Shaiva Sidhdhantha Home Page