7.100 திருநொடித்தான்மலை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் திருப்பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

1017	தானெனை முன்படைத்தான்	7.100.1
	    அத றிந்துதன் பொன்னடிக்கே	
	நானென பாடலந்தோ	
	    நாயினேனைப் பொருட்படுத்து	
	வானெனை வந்தெதிர்கொள்ள	
	    மத்த யானை அருள்புரிந்து	
	ஊனுயிர் வேறுசெய்தான்	
	    நொடித் தான்மலை உத்தமனே.	
		
1018	ஆனை உரித்தபகை	7.100.2
	     அடி யேனொடு மீளக்கொலோ	
	ஊனை உயிர்வெருட்டி	
	     ஒள்ளியானை நினைந்திருந்தேன்	
	வானை மதித்தமரர்	
	     வலஞ் செய்தெனை ஏறவைக்க	
	ஆனை அருள்புரிந்தான்	
	     நொடித் தான்மலை உத்தமனே.	
		
1019	மந்திரம் ஒன்றறியேன்	7.100.3
	     மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்	
	சுந்தர வேடங்களால்	
	     துரி சேசெயுந் தொண்டன்எனை	
	அந்தர மால்விசும்பில்	
	     அழ கானை அருள்புரிந்த	
	துந்தர மோநெஞ்சமே 	
	     நொடித் தான்மலை உத்தமனே.	
		
1020	வாழ்வை உகந்தநெஞ்சே	7.100.4
	     மடவார்தங்கள் வல்வினைப்பட்	
	டாழ முகந்தஎன்னை	
	     அது மாற்றி அமரரெல்லாம்	
	சூழ அருள்புரிந்து	
	     தொண்ட னேன்பரம் அல்லதொரு	
	வேழம் அருள்புரிந்தான்	
	     நொடித் தான்மலை உத்தமனே.	
		
1021	மண்ணுல கிற்பிறந்து	7.100.5
	   நும்மை வாழ்த்தும் வழியடியார்	
	பொன்னுல கம்பெறுதல்	
	    தொண்டனேனின்று கண்டொழிந்தேன்	
	விண்ணுல கத்தவர்கள்	
	    விரும்ப வெள்ளை யானையின்மேல்	
	என்னுடல் காட்டுவித்தான்	
	    நொடித் தான்மலை உத்தமனே.	
		
1022	அஞ்சினை ஒன்றிநின்று	7.100.6
	    அலர்கொண்டடி சேர்வறியா	
	வஞ்சனை என்மனமே	
	    வைகி வானநன் னாடர்முன்னே	
	துஞ்சுதல் மாற்றுவித்துத்	
	   தொண்டனேன்பர மல்லதொரு	
	வெஞ்சின ஆனைதந்தான்	
	    நொடித் தான்மலை உத்தமனே.	
		
1023	நிலைகெட விண்அதிர	7.100.7
	   நிலம் எங்கும் அதிர்ந்தசைய	
	மலையிடை யானைஏறி 	
	      வழி யேவரு வேன்எதிரே	
	அலைகட லால்அரையன்	
	    னலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச	
	உலையணை யாதவண்ணம் 	
	     நொடித் தான்மலை உத்தமனே.	
		
1024	அரவொலி ஆகமங்கள்	7.100.8
	    அறி வார்அறி தோத்திரங்கள்	
	விரவிய வேதஒலி	
	    விண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப	
	வரமலி வாணன்வந்து	
	    வழி தந்தெனக் கேறுவதோர்	
	சிரமலி யானைதந்தான்	
	    நொடித் தான்மலை உத்தமனே.	
		
1025	இந்திரன் மால்பிரமன்	7.100.9
	    னெழி லார்மிகு தேவரெல்லாம்	
	வந்தெதிர் கொள்ள என்னை	
	   மத்த யானை அருள்புரிந்து	
	மந்திர மாமுனிவர்	
	   இவ னார்என எம்பெருமான்	
	நந்தமர் ஊரனென்றான்	
	   நொடித்தான்மலை உத்தமனே.	
		
1026	ஊழிதோ றூழிமுற்றும்	7.100.10
	   உயர் பொன்னொடித் தான்மலையைச்	
	சூழிசை யின்கரும்பின்	
	   சுவை நாவல ஊரன்சொன்ன	
	ஏழிசை இன்தமிழால்	
	   இசைந் தேத்திய பத்தினையும்	
	ஆழி கடலரையா	
	அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே.	

	* நொடித்தான்மலையென்பது - கயிலைமலை.	

  திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page