7.99 திருநாகேச்சரம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசை கேட்க:-

Get the Flash Player to see this player.

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

1006	பிறையணி வாணுதலாள்	7.99.1
	  உமையாளவள் பேழ்கணிக்க	
	நிறையணி நெஞ்சனுங்க	
	  நீலமால்விடம் உண்டதென்னே	
	குறையணி குல்லைமுல்லை	
	  அளைந்துகுளிர் மாதவிமேல்	
	சிறையணி வண்டுகள்சேர்	
	  திருநாகேச் சரத்தானே.	
		
1007	அருந்தவ மாமுனிவர்க்	7.99.2
	  கருளாகியோர் ஆலதன்கீழ்	
	இருந்தற மேபுரிதற்	
	  கியல்பாகிய தென்னைகொலாம்	
	குருந்தய லேகுரவம்	
	  அரவின்னெயி றேற்றரும்பச்	
	செருந்திசெம் பொன்மலருந்	
	  திருநாகேச் சரத்தானே.	
		
1008	பாலன தாருயிர் மேற்	7.99.3
	  பரியாது பகைத்தெழுந்த	
	காலனை வீடுவித்துக்	
	  கருத்தாக்கிய தென்னைகொலாம்	
	கோல மலர்க்குவளைக்	
	  கழுநீர்வயல் சூழ்கிடங்கில்	
	சேலொடு வாளைகள்பாய்	
	  திருநாகேச் சரத்தானே.	
		
1009	குன்ற மலைக்குமரி	7.99.4
	  கொடியேரிடை யாள்வெருவ	
	வென்றி மதகரியின்	
	  உரிபோர்த்ததும் என்னைகொலாம்	
	முன்றில் இளங்கமுகின்	
	   முதுபாளை மதுவளைந்து	
	தென்றல் புகுந்துலவுந்	
	  திருநாகேச் சரத்தானே.	
		
1010	அரைவிரி கோவணத்தோ	7.99.5
	  டரவார்த்தொரு நான்மறைநூல்	
	உரைபெரு கவ்வுரைத்தன்	
	  றுகந்தருள் செய்ததென்னே	
	வரைதரு மாமணியும்	
	  வரைச்சந்தகி லோடும்உந்தித்	
	திரைபொரு தண்பழனத்	
	  திருநாகேச் சரத்தானே.	
		
1011	தங்கிய மாதவத்தின்	7.99.6
	  தழல்வேள்வியி னின்றெழுந்த	
	சிங்கமும் நீள்புலியுஞ்	
	  செழுமால்கரி யோடலறப்	
	பொங்கிய போர்புரிந்து	
	  பிளந்தீருரி போர்த்ததென்னே	
	செங்கயல் பாய்கழனித்	
	  திருநாகேச் சரத்தானே.	
		
1012	நின்றஇம் மாதவத்தை	7.99.7
	  ஒழிப்பான்சென் றணைந்துமிகப்	
	பொங்கிய பூங்கணைவேள்	
	  பொடியாக விழித்தல்என்னே	
	பங்கய மாமலர்மேல்	
	  மதுவுண்டுவண் தேன்முரலச்	
	செங்கயல் பாய்வயல்சூழ்	
	  திருநாகேச் சரத்தானே.	
		
1013	வரியர நாணதாக	7.99.8
	  மாமேரு வில்லதாக	
	அரியன முப்புரங்கள்	
	  அவைஆரழல் ஊட்டல்என்னே	
	விரிதரு மல்லிகையும்	
	   மலர்ச்சண்பக மும்மளைந்து	
	திரிதரு வண்டுபண்செய்	
	  திருநாகேச் சரத்தானே.	
		
1014	அங்கியல் யோகுதன்னை	7.99.9
	  அழிப்பான்சென் றணைந்துமிகப்	
	பொங்கிய பூங்கணைவேள்	
	  பொடியாக விழித்தல்என்னே	
	பங்கய மாமலர்மேல்	
	  மதுவுண்டுபண் வண்டறையச்	
	செங்கயல் நின்றுகளுந்	
	  திருநாகேச் சரத்தானே.	
		
1015	குண்டரைக் கூறையின்றித்	7.99.10
	  திரியுஞ்சமண் சாக்கியப்பேய்	
	மிண்டரைக் கண்டதன்மை	
	  விரவாகிய தென்னைகொலோ	
	தொண்டிரைத் துவணங்கித்	
	  தொழில்பூண்டடி யார்பரவும்	
	தெண்டிரைத் தண்வயல்சூழ்	
	  திருநாகேச் சரத்தானே.	
		
1016	கொங்கணை வண்டரற்றக்	7.99.11
	  குயிலும்மயி லும்பயிலும்	
	தெங்கணை பூம்பொழில்சூழ்	
	  திருநாகேச் சரத்தானை	
	வங்கம் மலிகடல்சூழ்	
	  வயல்நாவலா ரூரன்சொன்ன	
	பங்கமில் பாடல்வல்லார் 	
	  அவர்தம்வினை பற்றறுமே.	

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்,
தேவியார் - குன்றமுலையம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page