சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருவாரூர்ப்பரவையுண்மண்டளி தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 96வது திருப்பதிகம்)


7.96 திருவாரூர்ப்பரவையுண்மண்டளி

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

 
தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயே கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும்	
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்	
காவாஎன் பரவையுண் மண்டளி யம்மானே.		7.96.1

பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி	
மின்னானே செக்கர் வானத் திளஞாயி	
றன்னானே பரவையுண் மண்டளி யம்மானே.		7.96.2

நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா புண்ணியம் ஆனானே	
பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க்	
காமாறென் பரவையுண் மண்டளி யம்மானே.		7.96.3

நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்
காக்கின்றாய் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்	
வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத்	
தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி யம்மானே.	7.96.4

பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே	
நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை	
அஞ்சேலென் பரவையுண் மண்டளி யம்மானே.		7.96.5

அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்	
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்	
அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே.		7.96.6

விண்டானே மேலையார் மேலையார் மேலாய
எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன்	
கண்டானே கண்டனைக் கொண்டிட்டுக் காட்டாயே	
அண்டானே பரவையுண் மண்டளி யம்மானே.		7.96.7

காற்றானே கார்முகில் போல்வதோர் கண்டத்தெம்
கூற்றானே கோல்வளை யாளையோர் பாகமாய்	
நீற்றானே நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்	
ஆற்றானே பரவையுண் மண்டளி யம்மானே.		7.96.8

செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறும்	
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத	
அடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே.		7.96.9

கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி யம்மானை	
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை	
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.		7.96.10

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் சோழநாட்டிலுள்ளது; இஃது காவிரி தென்கரை 89வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - தூவாய்நாதர்.


Back to Complete Seventh Thirumurai Index

Back to Sundarar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page