7.95 திருவாரூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - செந்துருத்தி

திருச்சிற்றம்பலம்

964	மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்	7.95.1
	    பிறரை வேண்டாதே	
	மூளாத் தீப்போல் உள்ளே கனன்று	
	    முகத்தால் மிகவாடி	
	ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்	
	    அல்லல் சொன்னக்கால்	
	வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்	
	    வாழ்ந்து போதீரே.	
		
965	விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்	7.95.2
	    விரும்பி ஆட்பட்டேன்	
	குற்றம் ஓன்றுஞ் செய்த தில்லை	
	    *கொத்தை ஆக்கினீர்	
	எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்	
	    நீரே பழிப்பட்டீர்	
	மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்	
	    வாழ்ந்து போதீரே.	
		
966	அன்றில் முட்டா தடையுஞ் சோலை	7.95.3
	    ஆரூர் அகத்தீரே	
	கன்று முட்டி உண்ணச் சுரந்த	
	    காலி யவைபோல	
	என்றும் முட்டாப் பாடும் அடியார்	
	    தங்கண் காணாது	
	குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்	
	    வாழ்ந்து போதீரே.	
		
967	துருத்தி உறைவீர் பழனம் பதியாச்	7.95.4
	    சோற்றுத் துறஆள்வீர்	
	இருக்கை திருவா ரூரே உடையீர்	
	    மனமே எனவேண்டா	
	அருத்தி யுடைய அடியார் தங்கள்	
	    அல்லல் சொன்னக்கால்	
	வருத்தி வைத்து மறுமை பணித்தால்	
	    வாழ்ந்து போதீரே.	
		
968	செந்தண் பவளந் திகழுஞ் சோலை	7.95.5
	    இதுவோ திருவாரூர்	
	எந்தம் அடிகேள் இதுவே ஆமா(று)	
	    உமக்காட் பட்டோர்க்குச்	
	சந்தம் பலவும் பாடும் அடியார்	
	   தங்கண் காணாது	
	வந்தெம் பெருமான் முறையோ வென்றால்	
	    வாழ்ந்து போதீரே.	
		
969	தினைத்தாள் அன்ன செங்கால் நாரை	7.95.6
	    சேருந் திருவாரூர்ப்	
	புனைத்தார் கொன்றைப் பொன்போல் 	
	    மாலைப் புரிபுன் சடையீரே	
	தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து	
	    தங்கண் காணாது	
	மனத்தால் வாடிஅடியார் இருந்தால்	
	    வாழ்ந்து போதீரே.	
		
970	ஆயம் பேடை அடையுஞ் சோலை	7.95.7
	    ஆரூர் அகத்தீரே	
	ஏயெம் பெருமான் இதுவே ஆமா	
	    றுமக்காட் பட்டோர்க்கு	
	மாயங் காட்டிப் பிறவி காட்டி	
	    மறவா மனங்காட்டிக்	
	காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்	
	    வாழ்ந்து போதீரே.	
		
971	கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்	7.95.8
	    கலந்த சொல்லாகி	
	இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை	
	    இகழா தேத்துவோம்	
	பழிதான் ஆவ தறியீர் அடிகேள்	
	    பாடும் பத்தரோம்	
	வழிதான் காணா தலமந் திருந்தால்	
	    வாழ்ந்து போதீரே.	
		
972	பேயோ டேனும் பிரிவொன் றின்னா	7.95.9
	    தென்பர் பிறரெல்லாங்	
	காய்தான் வேண்டிற் கனிதான் அன்றோ	
	   கருதிக் கொண்டக்கால்	
	நாய்தான் போல நடுவே திரிந்தும்	
	  உமக்காட் பட்டோர்க்கு	
	வாய்தான் திறவீர் திருவா ரூரீர்	
	    வாழ்ந்து போதீரே.	
		
973	செருந்தி செம்பொன் மலருஞ் சோலை	7.95.10
	    இதுவோ திருவாரூர்	
	பொருந்தித் திருமூ லத்தா னம்மே	
	   இடமாக் கொண்டீரே	
	இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை	
	   இகழா தேத்துவோம்	
	வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்	
	    வாழ்ந்து போதீரே.	
		
974	காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்	7.95.11
	    கலைகள் பலவாகி	
	ஆரூர்த் திருமூ லத்தா னத்தே	
	   அடிப்பே ராரூரன்	
	பாரூர் அறிய என்கண் கொண்டீர்	
	   நீரே பழிப்பட்டீர்	
	வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்	
	    வாழ்ந்து போதீரே.	

திருச்சிற்றம்பலம் 

காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று,
இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page