|
943 |
நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நரையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.1 |
944 | அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கை மடவார் மடுவிற் றடநீர்த்
திளைக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.2
|
945 | இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த
பகழி யொடுவில் லுடையான் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலந்
திகழும் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.3
|
946 | மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம் நனிபள் ளியெழத்
திறக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.4
|
947 | முழுநீ றணிமே னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளுஞ்
செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.5
|
948 | ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண்
டானார் அடலே றமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.6
|
949 | காரூர் கடலில் விடமுண் டருள்செய்
நீரூர் சடையன் நிலவும் இடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.7
|
950 | கரியின் உரியுங் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.8
|
951 | பேணா முனிவன் பெருவேள் வியெலாம்
மாணா மைசெய்தான் மருவும் இடமாம்
பாணார் குழலும் முழவும் விழவிற்
சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.9
|
952 | குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த
எறியும் மழுவாட் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத் தவர்கள்
செறியும் நறையூர்ச் சித்தீச் சரமே. | 7.93.10
|
953 | போரார் புரமெய் புனிதன் அமருஞ்
சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய் துவரே. | 7.93.11
|