சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருப்புக்கொளியூர் - அவிநாசி தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 92வது திருப்பதிகம்)


7.92 திருப்புக்கொளியூர் - அவிநாசி

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

 
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே	
உற்றாய் என்றுன்னையே உள்குகின் றேன்உணர்ந் துள்ளத்தால்	
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே	
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.			7.92.1

வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ	
ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே	
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை	
இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே.		7.92.2

எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்கால்	
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பார்இலை	
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே	
எங்கோ னேஉனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.		7.92.3

உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்	
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்	
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே	
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.	7.92.4

அரங்காவ தெல்லா மாயிடு காடது அன்றியும்	
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்	
புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே	
குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.		7.92.5

நாத்தா னும்உனைப் பாடல்அன் றிநவி லாதெனாச்	
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்	
பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே	
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.		7.92.6

மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்	
சந்திகள் தோறுஞ்சலபுட்பம் இட்டு வழிபடப்	
புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே	
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.		7.92.7

பேணா தொழிந்தேன் உன்னைஅல் லாற்பிற தேவரைக்	
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்	
பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே	
காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.		7.92.8

நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே	
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்	
புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை	
உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.		7.92.9

நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்	
போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக்	
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய	
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.		7.92.10

	        - திருச்சிற்றம்பலம் -

இது முதலையுண்டபிள்ளையை அழைப்பித்தபதிகம்.

  • இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது; இஃது கொங்குநாட்டில் உள்ள முதலாவது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - அவிநாசியப்பர்; தேவியார் - பெருங்கருணைநாயகி.


Back to Complete Seventh Thirumurai Index

Back to Sundarar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page