சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருவொற்றியூர் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 91வது திருப்பதிகம்)


7.91 திருவொற்றியூர்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

 
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்	
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்	
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே	
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.	7.91.1
	
பந்துங் கிளியும் பயிலும் பாவை	
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்	
எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்	
உந்துந் திரைவாய் ஒற்றி யூரே.	7.91.2
	
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்	
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்	
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்	
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே.	7.91.3
	
என்ன தெழிலும் நிறையும் கவர்வான்	
புன்னை மலரும் புறவில் திகழும்	
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்	
உன்னப் படுவான் ஒற்றி யூரே.	7.91.4
	
பணங்கொள் அரவம் பற்றிப் பரமன்	
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி	
வணங்கும் இடைமென் மடவார் இட்ட	
உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே.	7.91.5
	
படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்	
விடையார் கொடியன் வேத நாவன்	
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை	
உடையான் உறையும் ஒற்றி யூரே.	7.91.6
	
சென்ற புரங்கள் தீயில் வேவ	
வென்ற விகிர்தன் வினையை வீட்ட	
நன்று நல்ல நாதன் நரையே	
றொன்றை உடையான் ஒற்றி யூரே.	7.91.7
	
கலவ மயில்போல் வளைக்கை நல்லார்	
பலரும் பரவும் பவளப் படியான்	
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்	
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே.	7.91.8
	
பற்றி வரையை எடுத்த அரக்கன்	
இற்று முரிய விரலால் அடர்த்தார்	
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்	
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.	7.91.9
	
ஒற்றி யூரும் அரவும் பிறையும்	
பற்றி யூரும் பவளச் சடையான்	
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த	
கற்றுப் பாடக் கழியும் வினையே.	7.91.10

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது; இஃது தொண்டைநாட்டில் உள்ள 20வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - புற்றிடங்கொண்டார்; தேவியார் - வடிவுடையம்மை.


Back to Complete Seventh Thirumurai Index

Back to Sundarar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page