சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.90 கோயில்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

913

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே
மனனேநீ வாழும் நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும்
எரிஅகலுங் கரியபாம்பும்
பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.

7.90.1
914

பேராது காமத்திற் சென்றார்போல்
அன்றியே பிரியா துள்கிச்
சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன்
னடிவீழுந் திருவி னாரை
ஓராது தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.

7.90.2
915

நரியார்தங் கள்ளத்தாற் பக்கான
பரிசொழிந்து நாளும் உள்கிப்
பிரியாத அன்பராய்ச் சென்றுமுன்
அடிவீழுஞ் சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.

7.90.3
916

கருமையார் தருமனார் தமர்நம்மைக்
கட்டியகட் டறுப்பிப் பானை
அருமையாந் தன்னுலகந் தருவானை
மண்ணுலகங் காவல் பூண்ட
உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா
மன்னவரை மறுக்கஞ் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.

7.90.4
917

கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல்
வெண்மதியக் கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட
உதைத்துகந் துலவா இன்பம்
தருவானைத் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.

7.90.5
918

உய்த்தாடித் திரியாதே உள்ளமே
ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண்
நெஞ்சமே நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன்
பரஞ்சோதி பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.

7.90.6
919

முட்டாத முச்சந்தி மூவா
யிரவர்க்கு மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார்
பாவமும் வினையும் போக
விட்டானை மலையெடுத்த இராவணனைத்
தலைபத்தும் நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.

7.90.7
920

கற்றானுங் குழையுமா றன்றியே
கருதுமா கருத கிற்றார்க்
கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண்
உள்ளமே நம்மைநாளுஞ்
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.

7.90.8
921

நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ்
செய்மனமே நம்மை நாளுந்
தாடுடைய தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய
சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.

7.90.9
922

பாரூரும் அரவல்குல் உமைநங்கை
யவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
றம்பலத்தே பெற்றா மன்றே.

7.90.10


திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page