சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.89 திருவெண்பாக்கம்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

902

பிழையுளன பொறுத்திடுவர்
என்றடியேன் பிழைத்தக்காற்
பழியதனைப் பாராதே
படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
கோயிலுளா யேயென்ன
உழையுடையான் உள்ளிருந்து
உளோம்போகீர் என்றானே.

7.89.1
903

இடையறியேன் தலையறியேன்
எம்பெருமான் சரணமென்பேன்
அடையுடையன் நம்மடியான்
என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன்
வெண்ணீற்றன் புலியின்றோல்
உடையுடையான் எனையுடையான்
உளோம்போகீர் என்றானே.

7.89.2
904

செய்வினையொன் றறியாதேன்
திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா
யோவென்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான்
உளோம்போகீர் என்றானே.

7.89.3
905

கம்பமருங் கரியுரியன்
கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன்
சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே இருந்தீரே
என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணையெனக்கு
உளோம்போகீர் என்றானே.

7.89.4
906

பொன்னிலங்கு நறுங்கொன்றை
புரிசடைமேற் பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள்
பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார்
தொழுதேத்த அடியேனும்
உன்னதமாய்க் கேட்டலுமே
உளோம்போகீர் என்றானே.

7.89.5
907

கண்ணுதலாற் காமனையுங்
காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல்
தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய்
இங்கிருந்தா யோவென்ன
ஒண்ணுதலி பெருமானார்
உளோம்போகீர் என்றானே.

7.89.6
908

பார்நிலவு மறையோரும்
பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச்
சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர்
இங்கிருந்தீ ரேயென்ன
ஊரரவம் அரைக்கசைத்தான்
உளோம்போகீர் என்றானே.

7.89.7
909

வாரிடங்கொள் வனமுலையாள்
தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப்
பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன்
கருதுமிடந் திருஒற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான்
உளோம்போகீர் என்றானே.

7.89.8
910

பொன்னவிலுங் கொன்றையினாய்
போய்மகிழ்க்கீ ழிருவென்று
சொன்னஎனைக் காணாமே
சூளறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே
இங்கிருந்தா யோவென்ன
ஒன்னலரைக் கண்டாற்போல்
உளோம்போகீர் என்றானே.

7.89.9
911

மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாந்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தா யோவென்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே.

7.89.10
912

ஏராரும் பொழில்நிலவு
வெண்பாக்கம் இடங்கொண்ட
காராறும் மிடாற்றானைக்
காதலித்திட் டன்பினொடுஞ்
சீராருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க்
கடையாவல் வினைதானே.

7.89.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - வெண்பாக்கத்தீசுவரர், தேவியார் - கனிவாய்மொழியம்மை.

இது திருவொற்றியூரில் சங்கிலிநாச்சியாருக்குக் கூறிய சபதத்தை
மறந்து திருவாரூருக்குச் செல்லுங்கருத்தினால், திருவொற்றியூரெல்லையைக்
கடந்த அளவில் பார்வைமறைய அவ்வண்ணமேயெழுந்தருளி
வெண்பாக்கத்திற்சென்று ஆலயத்துக்குளடைந்து தரிசித்துக்
கோயிலிலிருக்கின்றீரோவென்ன, பரமசிவம் ஊன்றுகோலொன்றருளிச்செய்து
நாம் கோயிலுலிருக்கிறோம் நீர் போமென்று அருளிச்செய்தபோது ஓதிய பதிகம்.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page