7.87 திருப்பனையூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

மாடமாளிகை கோபுரத்தொடு	
  மண்டபம்வள ரும்வளர்பொழில்	
பாடல் வண்டறையும்	
  பழனத் திருப்பனையூர்த்	
தோடுபெய்தொரு காதினிற்குழை	
  தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்	
றாடு மாறுவல்லார்	
  அவரே அழகியரே.		7.87.1

நாறுசெங்கழு நீர்மலர்நல்ல	
  மல்லிகை சண்பகத்தொடு	
சேறுசெய் கழனிப்	
  பழனத் திருப்பனையூர்	
நீறுபூசிநெய் யாடிதன்னைநினைப்பவர்	
  தம் மனத்தனாகிநின்	
றாறு சூடவல்லார்	
  அவரே அழகியரே.		7.87.2	

செங்கண்மேதிகள் சேடெறிந்து	
  தடம்படிதலிற் சேலினத்தொடு	
பைங்கண் வாளைகள்பாய்	
  பழனத் திருப்பனையூர்த்	
திங்கள்சூடிய செல்வனாரடி	
  யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி	
லங்கிருந் துறைவார்	
  அவரே அழகியரே.		7.87.3

வாளைபாய மலங்கிளங்கயல்	
  வரிவரால்உக ளுங்கழனியுள்	
பாளைஒண் கமுகம்	
  புடைசூழ் திருப்பனையூர்த்	
தோளுமாகமுந் தோன்றநட்டமிட்	
  டாடுவாரடித் தொண்டர் தங்களை	
ஆளு மாறுவல்லார்	
  அவரே அழகியரே.		7.87.4

கொங்கை யார்பலருங் குடைந்	
  தாடநீர்க்குவளை மலர்தர	
பங்கயம் மலரும்	
  பழனத் திருப்பனையூர்	
மங்கை பாகமும் மாலோர் பாகமுந்	
  தாமுடையவர் மான்மழுவினோ	
டங்கைத் தீஉகப்பார்	
  அவரே அழகியரே.		7.87.5

காவிரிபுடை சூழ்சோணாட்டவர்	
  தாம்பரவிய கருணையங்கடலப்	
பாவிரி புலவர்	
  பயிலுந் திருப்பனையூர்	
மாவிரிமட நோக்கிஅஞ்ச	
  மதகரியுரி போர்த்துகந்தவர்	
ஆவில்ஐந் துகப்பார்	
  அவரே அழகியரே.		7.87.6

மரங்கள்மேல்மயி லாலமண்டப	
  மாடமாளிகை கோபுரத்தின்மேல்	
திரங்கல்வன் முகவன்	
  புகப்பாய் திருப்பனையூர்த்	
துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த்	
  தோன்றலுமறி யாமற்றோன்றிநின்	
றரங்கில் ஆடவல்லார்	
  அவரே அழகியரே.		7.87.7

மண்ணெலாம்முழ வம்மதிர்தர	
  மாடமாளிகை கோபுரத்தின்மேற்	
பண்ணி யாழ்முரலும்	
  பழனத் திருப்பனையூர்	
வெண்ணிலாச் சடைமேவியவிண்	
  ணவரொடு மண்ணவர்தொழ	
அண்ணலாகி நின்றார்	
  அவரே அழகியரே.		7.87.8

குரக்கினங்கு திகொள்ளத் தேனுகக்	
  குண்டுதண் வயற்கெண்டை பாய்தரப்	
பரக்குந் தண்கழனிப்	
  பழனத் திருப்பனையூர்	
இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை	
  தோளிருபது தாள்நெரிதர	
அரக்கனை அடர்த்தார்	
  அவரே அழகியரே.		7.87.9

வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர்	
  மாதவர் வளரும் வளர்பொழில்	
பஞ்சின் மெல்லடியார்	
  பயிலும் திருப்பனையூர்	
வஞ்சியும்வளர் நாவலூரன்	
  வனப்பகைய வளப்பன்வன்றொண்டன்	
செஞ்சொற் கேட்டுகப்பார்	
  அவரே அழகியரே.		7.87.10

திருச்சிற்றம்பலம் 

 • இத்தலம் சோழ நாட்டிலுள்ளது; இஃது காவிரி தென்கரையில் உள்ள 73வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமிபெயர் - அழகியநாதர்; தேவியார் - பெரியநாயகி.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page