சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருவன்பார்த்தான்பனங்காட்டூர் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 86வது திருப்பதிகம்)


7.86 திருவன்பார்த்தான்பனங்காட்டூர்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 
விடையின்மேல் வருவானை	
  வேதத்தின் பொருளானை	
அடையில்அன் புடையானை	
  யாவர்க்கும் அறியொண்ணா	
மடையில்வா ளைகள் பாயும்	
  வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்	
சடையிற்கங்கை தரித்தானைச்	
  சாராதார் சார்பென்னே.		7.86.1
	
அறையும்பைங் கழல்ஆர்ப்ப	
  அரவாட அனல்ஏந்திப்	
பிறையுங்கங் கையுஞ்சூடிப்	
  பெயர்ந்தாடும் பெருமானார்	
பறையுஞ்சங் கொலிஓவாப்	
  படிறன்றன் பனங்காட்டூர்	
உறையும்எங்கள் பிரானை	
  உணராதார் உணர்வென்னே.	7.86.2
	
தண்ணார்மா மதிசூடித்	
  தழல்போலுந் திருமேனிக்	
கெண்ணார்நாண் மலர்கொண்டங்	
  கிசைந்தேத்தும் அடியார்கள்	
பண்ணார்பா டல்அறாத	
  படிறன்றன் பனங்காட்டூர்ப்	
பெண்ணாணா யபிரானைப்	
  பேசாதார் பேச்சென்னே.	7.86.3
	
நெற்றிக்கண் ணுடையானை	
  நீறேறுந் திருமேனிக்	
குற்றமில் குணத்தானைக்	
  கோணாதார் மனத்தானைப்	
பற்றிப்பாம் பரைஆர்த்த	
  படிறன்றன் பனங்காட்டூர்ப்	
பெற்றொன்றே றும்பிரானைப்	
  பேசாதார் பேச்சென்னே.	7.86.4
	
உரமென்னும் பொருளானை	
  உருகில்உள் ளுறைவானைச்	
சிரமென்னுங் கலனானைச்	
  செங்கண்மால் விடையானை	
வரம்முன்ன மருள்செய்வான்	
  வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்	
பரமன்எங்கள் பிரானைப்	
  பரவாதார் பரவென்னே.		7.86.5
	
எயிலார்பொக் கம்எரித்த	
  எண்டோள்முக் கண்இறைவன்	
வெயிலாய்க்காற் றெனவீசி	
  மின்னாய்த்தீ எனநின்றான்	
மயிலார்சோ லைகள்சூழ்ந்த	
  வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்	
பயில்வானுக் கடிமைக்கட்	
  பயிலாதார் பயில்வென்னே.	7.86.6
	
மெய்யன்வெண் பொடிபூசும்	
  விகிர்தன்வே தமுதல்வன்	
கையில்மான் மழுவேந்திக்	
  காலன்கா லம்அறுத்தான்	
பைகொள்பாம் பரையார்த்த	
  படிறன்றன் பனங்காட்டூர்	
ஐயன்எங் கள்பிரானை	
  அறியாதார் அறிவென்னே.	7.86.7
	
வஞ்சமற்ற மனத்தாரை	
  மறவாத பிறப்பிலியைப்	
பஞ்சிச்சீ றடியாளைப்	
  பாகம்வைத் துகந்தானை	
மஞ்சுற்ற மணிமாட	
  வன்பார்த்தான் பனங்காட்டூர்	
நெஞ்சத்தெங் கள்பிரானை	
  நினையாதார் நினைவென்னே.	7.86.8
	
மழையானுந் திகழ்கின்ற	
  மலரோன்என் றிருவர்தாம்	
உழையாநின் றவர்உள்க	
  உயர்வானத் துயர்வானைப்	
பழையானைப் பனங்காட்டூர்	
  பதியாகத் திகழ்கின்ற	
குழைகாதற் கடிமைக்கட்	
  குழையாதார் குழைவென்னே.	7.86.9
	
பாரூரும் பனங்காட்டூர்ப்	
  பவளத்தின் படியானைச்	
சீரூருந் திருவாரூர்ச்	
  சிவன்பேர்சென் னியில்வைத்த	
ஆரூரன் அடித்தொண்டன்	
  அடியன்சொல் அடிநாய்சொல்	
ஊரூரன் உரைசெய்வார்	
  உயர்வானத் துயர்வாரே.	7.86.10

	    - திருச்சிற்றம்பலம் -
 • இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது; இஃது தொண்டைநாட்டில் உள்ள 9வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - பனங்காட்டீசுவரர்; தேவியார் - அமிர்தவல்லியம்மை.


Back to Complete Seventh Thirumurai Index

Back to Sundarar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page