|
862 |
வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங்
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகளிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.1 |
863 | வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையர விளவல்குற் பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில்
ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.2
|
864 | ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று
வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில்
ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.3
|
865 | சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.4
|
866 | வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற்
சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடுங்
கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்
ஆதியிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.5
|
867 | வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.6
|
868 | மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல்
இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடுங்
குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில்
அழகனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.7
|
869 | மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்
அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.8
|
870 | வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப்
பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்
ஆலனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. | 7.85.9
|
871 | கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும்
ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொற்
பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே. | 7.85.10
|