சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.84 திருக்கானப்பேர்

பண் - புறநீர்மை

திருச்சிற்றம்பலம்

852

தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ்
சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்
புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள்
பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்
கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோளுங்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

7.84.1
853

கூத லிடுஞ்சடையுங் கோளர வும்விரவுங்
கொக்கிற குங்குளிர்மா மந்தமும் ஒத்துனதாள்
ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந்
துள்ளுரு காவிரசும் ஓசையைப் பாடலும்நீ
ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன்
அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக்
காத லுறத்தொழுவ தென்றுகொ லோவடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

7.84.2
854

நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை
நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்
தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத்
தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை மாசறு சோதியனை
மாருத மும்மனலும் மண்டல மும்மாய
கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

7.84.3
855

செற்றவர் முப்புரம்அன் றட்ட சிலைத்தொழிலார்
சேவக முந்நினைவார் பாவக முந்நெறியுங்
குற்றமில் தன்னடியார் கூறும் இசைப்பரிசுங்
கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்
மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை
மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக்
கற்றன வும்பரவிக் கைதொழல் என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

7.84.4
856

கொல்லை விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற்
கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே
முல்லை படைத்தநகை மெல்லிய லாளருபால்
மோகம் மிகுத்திலங்குங் கூறுசெய் யெப்பரிசுந்
தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந்
திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்
கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

7.84.5
857

பண்ணு தலைப்பயனார் பாடலும் நீடுதலும்
பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித்
தெண்ணு தலைப்பெருமான் என்றெழு வாரவர்தம்
ஏசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி
நண்ணு தலைப்படுமா றெங்ஙனம் என்றயலே
நைகிற என்னைமதித் துய்யும்வண் ணமருளுங்
கண்ணு தலைக்கனியைக் காண்பதும் என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

7.84.6
858

மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனை
வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை
மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை
மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்
பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப்
பால்நறு நெய்தயிரைந் தாடு பரம்பரனைக்
காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

7.84.7
859

தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்
சுண்டத னுக்கிறவா தென்றும் இருந்தவனை
ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா
அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும்
ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தங்
கண்டனை அன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

7.84.8
860

நாதனை நாதமிகுத் தோசைய தானவனை
ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனையாள் தோழனை நாயகனைத்
தாழ்மக ரக்குழையுந் தோடும் அணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

7.84.9
861

கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்
பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்
உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும்
ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே.

7.84.10

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே காளையார் கோயில்.
சுவாமிபெயர் - காளைநாதேசுவரர், தேவியார் - பொற்கொடியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page