சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருவாரூர் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 83வது திருப்பதிகம்)


7.83 திருவாரூர்

பண் - புறநீர்மை

திருச்சிற்றம்பலம்

 
அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்	
சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக்(கு)	
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே.		7.83.1

நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து	
தென்றல் மணங்கமழும் தென்திரு வாரூர்புக்(கு)	
என்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே.		7.83.2

முன்னை முதற்பிறவி மூதறி யாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச்	
செந்நெல் வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்(கு)	
என்னுயிர்க் கின்னமுதை என்றுகொல் எய்துவதே.	7.83.3

நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக்	
கொல்ல நினைப்பனவுங் குற்றமும் அற்றொழியச்	
செல்வ வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்(கு)	
எல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே.		7.83.4

கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன்	
சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்தலைவாய்	
அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக்(கு)	
இடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே.	7.83.5

சூழ்ஒளி நீர்நிலந்தீத் தாழ் வளி ஆகாசம்
வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள்	
ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்(கு)	
ஏழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே.		7.83.6

கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச்	
செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்புக்(கு)	
என்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே.	7.83.7

ஆறணி நீள்முடிமேல் ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்தலையிற் பிச்சைகொள் நச்சரவன்	
சேறணி தண்கழனித் தென்றிரு வாரூர்புக்(கு)	
ஏறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே.		7.83.8

மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடுந்	
திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்(கு)	
எண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே.		7.83.9

மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்	
பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்	
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே.	7.83.10

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் சோழநாட்டிலுள்ளது; இஃது காவிரி தென்கரை 87வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - வன்மீகநாதர்; தேவியார் - அல்லியம்பூங்கோதை.


Back to Complete Seventh Thirumurai Index

Back to Sundarar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page