சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருச்சுழியல் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 82வது திருப்பதிகம்)


7.82 திருச்சுழியல்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

 
ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்	
வானாய்வரு மதியாய்விதி வருவான்இடம் பொழிலின்	
தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்	
நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.		7.82.1

தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ்	
சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத்	
திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல்	
தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே.		7.82.2

கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக்	
கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல்	
தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்	
அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே.			7.82.3

மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்றுக்	
கொலையானையின் உரிபோர்த்தஎம் பெருமான்திருச் சுழியல்	
அலையார்சடை யுடையான்அடி தொழுவார்பழு துள்ளம்	
நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே.		7.82.4

உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்தும்	
செற்றார்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல்	
பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமம்	
கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே.			7.82.5

மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச்	
சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல்	
நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்தும்	
தலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே.			7.82.6

சைவத்தசெவ் வுருவன்திரு நீற்றன்னுரு மேற்றன்	
கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான்	
தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்திருச் சுழியல்	
மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே.		7.82.7

பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியும்	
கோவேந்திய வினையத்தொடு குறுகப்புகல் அறியார்	
சேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல்	
மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே.			7.82.8

கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச்	
செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக்	
குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா	
மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே.			7.82.9

நீரூர்தரு நிமலன்திரு மலையார்க்கயல் அருகே	
தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்திருச் சுழியல்	
பேரூரென உரைவான்அடி பெயர்நாவலர் கோமான்	
ஆரூரன் தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே.			7.82.10

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது; இஃது பாண்டிநாட்டில் உள்ள 12வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - இணைத்திருமேனிநாதர்; தேவியார் - துணைமாலைநாயகியம்மை.


Back to Complete Seventh Thirumurai Index

Back to Sundarar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page