சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கழுக்குன்றம் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 81வது திருப்பதிகம்)


7.81 திருக்கழுக்குன்றம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

 
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே	
நின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவே	
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்	
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.			7.81.1

இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே	
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்	
நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி	
கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே.		7.81.2

நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்	
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்	
காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே.			7.81.3

வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை	
முளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம்	
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக்	
களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.			7.81.4

புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்	
முலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக்	
கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே.			7.81.5
	
மடமுடைய அடியார் தம்மனத் தேஉற	
விடமுடைய மிடறன் விண்ணவர் மேலவன்	
படமுடைய அரவன் றான்பயி லும்மிடங்	
கடமுடைய புறவில் தண்கழுக் குன்றமே.			7.81.6

ஊனம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடம்	
தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே	
கான மஞ்ஞை உறையுந் தண்கழுக் குன்றமே.			7.81.7

அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்	
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே	
கந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே.			7.81.8

பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் றான்உறை யும்மிடம்	
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை	
குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே.		7.81.9

பல்லில் வெள்ளைத் தலையன் தான்பயி லும்மிடம்
கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை	
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால்	
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.		7.81.10
	
	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது; இஃது தொண்டைநாட்டில் உள்ள 28வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - வேதகிரியீசுவரர்; தேவியார் - பெண்ணினல்லாளம்மை.


Back to Complete Seventh Thirumurai Index

Back to Sundarar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page