சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கேதீச்சரம் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 80வது திருப்பதிகம்)


7.80 திருக்கேதீச்சரம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

 
நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய்	
மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்	
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்	
செத்தார்எலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே.	7.80.1
	
சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளும்	
கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன்	
படவேரிடை மடவாளடு பாலாவியின் கரைமேல்	
திடமாஉறை கின்றான்திருக் கேதீச்சரத் தானே.	7.80.2
	
அங்கம்மொழி அன்னாரவர் அமரர்தொழு தேத்த	
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில்	
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல்	
செங்கண்ணர வசைத்தான்திருக் கேதீச்சரத் தானே.	7.80.3
	
கரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணான்	
வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருள்	
பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேல்	
தெரியும்மறை வல்லான்திருக் கேதீச்சரத் தானே.	7.80.4
	
அங்கத்துறு நோய்களடி யார்மேல்ஒழித் தருளி	
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில்	
பங்கஞ்செய்த மடவாளடு பாலாவியின் கரைமேல்	
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.	7.80.5
	
வெய்யவினை யாயஅடி யார்மேல்ஒழித் தருளி	
வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில்	
பையேர்இடை மடவாளடு பாலாவியின் கரைமேல்	
செய்யசடை முடியான்திருக் கேதீச்சரத் தானே.	7.80.6
	
ஊனத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி	
வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரில்	
பானத்துறும் மொழியாளடு பாலாவியின் கரைமேல்	
ஏனத்தெயி றணிந்தான்திருக் கேதீச்சரத் தானே.	7.80.7
	
அட்டன்னழ காகவ்வரை தன்மேல் அரவார்த்து	
மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரில்	
பட்டவ்வரி நுதலாளடு பாலாவியின் கரைமேல்	
சிட்டன்நமை ஆள்வான்திருக் கேதீச்சரத் தானே.	7.80.8
	
மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி	
மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரில்	
பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல்	
தேவன்னெனை ஆள்வான்திருக் கேதீச்சரத் தானே.	7.80.9
	
கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள்	
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை	
மறையார்புகழ் ஊரன்னடித் தொண்டனுரை செய்த	
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே.	7.80.10

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் ஈழநாட்டிலுள்ளது; இஃது ஈழநாட்டில் உள்ள 2வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - கேதீசுவரர்; தேவியார் - கௌரியம்மை.


Back to Complete Seventh Thirumurai Index

Back to Sundarar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page

s