சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கேதாரம் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 78வது திருப்பதிகம்)


7.78 திருக்கேதாரம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

 
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்	
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்	
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்	
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே.		7.78.1
	
பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்	
குறிகூவிய கூற்றங்கொளும் நாளால்அறம் உளவே	
அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு	
கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே.		7.78.2

கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவி	
நம்பன்னமை ஆள்வானென்று நடுநாளையும் பகலும்	
கம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிச்	
செம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.		7.78.3

உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ் சிலர்கள்	
வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர்	
சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின்	
கிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெ னீரே.		7.78.4

வாளோடிய தடங்கண்ணியர் வலையில் அழுந் தாதே	
நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி	
ஆளாய்உய்ம்மின் அடிகட்கிடம் அதுவேஎனில் இதுவே	
கீளோடர வசைத்தானிடம் கேதாரமெ னீரே.		7.78.5

தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறில் அன்றே	
குளியீர்உளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி	
தெளியீர்உளம் சீபர்ப்பதந் தெற்குவடக் காகக்	
கிளிவாழையொண் கனிகீறியுண் கேதாரமெ னீரே.	7.78.6

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக்	
கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய	
மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறியக்	
கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ னீரே.		7.78.7

முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத்	
துளைக்கைக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவி	
வளைக்கைப்பொழி மழைகூர்தர மயில்மான்பிணை நிலத்தைக்	
கிளைக்கமணி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.		7.78.8

பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர்	
மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையால்	
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக்	
கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே.		7.78.9

நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்	
யாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன்	
தேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த	
பாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.		7.78.10

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் வடநாட்டிலுள்ளது; இஃது வடநாட்டில் உள்ள 4வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - கேதாரேசுவரர்; தேவியார் - கேதாரேசுவரியம்மை.


Back to Complete Seventh Thirumurai Index

Back to Sundarar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page