சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.77 திருவையாறு

பண் - காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

781

பரவும் பரிசொன் றறியேன்நான்
பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும்
எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத்
தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.1
782

எங்கே போவே னாயிடினும்
அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை யொன்றும் இன்றியே
தலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடைமேற் கரந்தானே
கலைமான் மறியுங் கனல்மழுவுந்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.2
783

மருவிப் பிரிய மாட்டேன்நான்
வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரற்
பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஓப்பிக் கிளிகடிவார்
குழன்மேல் மாலை கொண்டோட்டந்
தரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.3
784

பழகா நின்று பணிசெய்வார்
பெற்ற பயனொன் றறிகிலேன்
இகழா துமக்காட் பட்டோர்க்கு
வேக படமொன் றரைச்சாத்தி
குழகா வாழைக் குலைத்தெங்கு
கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.4
785

பிழைத்த பிழையொன் றறியேன்நான்
பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட
மலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங்
கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.5
786

கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன்
றுடையாய் விடையாய் கையினால்
மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய்
முன்னீ பின்னீ முதல்வன்நீ
வார்க்கொள் அருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.6
787

மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப்
பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயிலெய்த
செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் ளருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.7
788

போழும் மதியும் புனக்கொன்றைப்
புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ
உன்னைத் தொழுவார் துயர்போக
வாழு மவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.8
789

கதிர்கொள் பசியே ஒத்தேநான்
கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான்
எம்மான் றம்மான் றம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய
வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.9
790

கூசி அடியார் இருந்தாலுங்
குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
தேச வேந்தன் திருமாலும்
மலர்மேல் அயனுங் காண்கிலாத்
தேச மெங்குந் தெளித்தாடத்
தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.10
791

கூடி அடியார் இருந்தாலுங்
குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன்
உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி யெங்குங் காண்கிலேன்
திருவா ரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.

7.77.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதியீசுவரர், தேவியார் - அறம் வளர்த்த நாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page