7.76 திருவாஞ்சியம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

771	பொருவ னார்புரி நூலர்	7.76.1
	   புணர்முலை உமையவ ளோடு	
	மருவ னார்மரு வார்பால்	
	   வருவதும் இல்லைநம் அடிகள்	
	திருவ னார்பணிந் தேத்துந்	
	    திகழ்திரு வாஞ்சியத் துறையும்	
	ஒருவ னார்அடி யாரை	
	    ஊழ்வினை நலிய வொட்டாரே.	
		
772	தொறுவில் ஆனிள ஏறு	7.76.2
	   துண்ணென இடிகுரல் வெருவிச்	
	செறுவில் வாளைகள் ஓடச்	
	   செங்கயல் பங்கயத் தொதுங்கக்	
	கறுவி லாமனத் தார்கள்	
	    காண்தகு வாஞ்சியத் தடிகள்	
	மறுவி லாதவெண் ணீறு	
	   பூசுதல் மன்னுமொன் றுடைத்தே.	
		
773	தூர்த்தர் மூவெயி லெய்து	7.76.3
	   சுடுநுனைப் பகழிய தொன்றாற்	
	பார்த்த னார்திரள் தோள்மேற்	
	   பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித்	
	தீர்த்த மாமலர்ப் பொய்கைத்	
	   திகழ்திரு வாஞ்சியத் தடிகள்	
	சாத்து மாமணிக் கச்சங்	
	    கொருதலை பலதலை யுடைத்தே.	
		
774	சள்ளை வெள்ளையங் குருகு	7.76.4
	    தானது வாம்எனக் கருதி	
	வள்ளை வெண்மலர் அஞ்சி	
	   மறுகியோர் வாளையின் வாயில்	
	துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்	
	  துறைமல்கு வாஞ்சியத் தடிகள்	
	வெள்ளை நுண்பொடிப் பூசும்	
	    விகிர்தமொன் றொழிகிலர் தாமே.	
		
775	மைகொள் கண்டர்எண் தோளர்	7.76.5
	    மலைமக ளுடனுறை வாழ்க்கைக்	
	கொய்த கூவிள மாலை	
	   குலவிய சடைமுடிக் குழகர்	
	கைதை நெய்தலங் கழனி	
	   கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்	
	பைதல் வெண்பிறை யோடு	
	    பாம்புடன் வைப்பது பரிசே.	
		
776	கரந்தை கூவிள மாலை	7.76.6
	   கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்	
	பரந்த பாரிடஞ் சூழ	
	   வருவர்நம் பரமர்தம் பரிசால்	
	திருந்து மாடங்கள் நீடு	
	    திகழ்திரு வாஞ்சியத் துறையும்	
	மருந்த னார்அடி யாரை	
	    வல்வினை நலிய வொட்டாரே.	
		
777	அருவி பாய்தரு கழனி	7.76.7
	   அலர்தரு குவளையங் கண்ணார்	
	குருவி யாய்கிளி சேப்பக்	
	   குருகினம் இரிதரு கிடங்கில்	
	பருவ ரால்குதி கொள்ளும்	
	    பைம்பொழில் வாஞ்சியத் துறையும்	
	இருவ ராலறி யொண்ணா	
	   இறைவன தறைகழல் சரணே.	
		
778	களங்க ஆர்தரு கழனி	7.76.8
	   அளிதரக் களிதரு வண்டு	
	உளங்க ளார்கலிப் பாடல்	
	   உம்பரில் ஒலித்திடுங் காட்சி	
	குளங்க ளானிழற் கீழ்நற்	
	   குயில்பயில் வாஞ்சியத் தடிகள்	
	விளங்கு தாமரைப் பாதம்	
	    நினைப்பவர் வினைநலி விலரே.	
		
779	வாழை யின்கனி தானும்	7.76.9
	   மதுவிம்மு வருக்கையின் சுளையுங்	
	கூழை வானரந் தம்மிற்	
	  கூறிது சிறிதெனக் குழறித்	
	தாழை வாழையந் தண்டாற்	
	    செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்	
	ஏழை பாகனை யல்லால்	
	    இறையெனக் கருதுத லிலமே.	
		
780	செந்நெ லங்கலங் கழனித்	7.76.10
	  திகழ்திரு வாஞ்சியத் துறையும்	
	மின்ன லங்கலஞ் சடையெம்	
	   இறைவன தறைகழல் பரவும்	
	பொன்ன லங்கனல் மாடப்	
	   பொழிலணி நாவலா ரூரன்	
	பன்ன லங்கனல் மாலை	
	   பாடுமின் பத்தரு ளீரே.	

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர்,
தேவியார் - வாழவந்தநாயகி.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page