7.75 திருவானைக்கா

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

761	மறைகள் ஆயின நான்கும்	7.75.1
	      மற்றுள பொருள்களு மெல்லாந்	
	துறையுந் தோத்திரத் திறையுந்	
	      தொன்மையும் நன்மையும் அய	
	அறையும் பூம்புனல் ஆனைக்	
	      காவுடை ஆதியை நாளும்	
	இறைவன் என்றடி சேர்வார்	
	      எம்மையும் ஆளுடை யாரே.	
		
762	வங்கம் மேவிய வேலை	7.75.2
	      நஞ்செழ வஞ்சர்கள் கூடித்	
	தங்கள் மேல்அட ராமை	
	     உண்ணென உண்டிருள் கண்டன்	
	அங்கம் ஓதிய ஆனைக்	
	     காவுடை ஆதியை நாளும்	
	எங்கள் ஈசனென் பார்கள்	
	     எம்மையும் ஆளுடை யாரே.	
		
763	நீல வண்டறை கொன்றை	7.75.3
	     நேரிழை மங்கைஓர் திங்கள்	
	சால வாளர வங்கள்	
	     தங்கிய செஞ்சடை எந்தை	
	ஆல நீழலுள் ஆனைக்	
	      காவுடை ஆதியை நாளும்	
	ஏலு மாறுவல் லார்கள்	
	     எம்மையும் ஆளுடை யாரே.	
		
764	தந்தை தாயுல குக்கோர்	7.75.4
	     தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்	
	பந்த மாயின பெருமான்	
	     பரிசுடை யவர்திரு வடிகள்	
	அந்தண் பூம்புனல் ஆனைக்	
	     காவுடை ஆதியை நாளும்	
	எந்தை என்றடி சேர்வார்	
	     எம்மையும் ஆளுடை யாரே.	
		
765	கணைசெந் தீயர வந்நாண்	7.75.5
	     கல்வளை யுஞ்சிலை யாகத்	
	துணைசெய் மும்மதில் மூன்றுஞ்	
	     சுட்டவ னேஉல குய்ய	
	அணையும் பூம்புனல் ஆனைக்	
	     காவுடை ஆதியை நாளும்	
	இணைகொள் சேவடி சேர்வார்	
	     எம்மையும் ஆளுடை யாரே.	
		
766	விண்ணின் மாமதி சூடி	7.75.6
	      விலையிலி கலன்அணி விமலன்	
	பண்ணின் நேர்மொழி மங்கை	
	     பங்கினன் பசுவுகந் தேறி	
	அண்ண லாகிய ஆனைக்	
	     காவுடை ஆதியை நாளும்	
	எண்ணு மாறுவல் லார்கள்	
	    எம்மையும் ஆளுடை யாரே.	
		
767	தார மாகிய பொன்னித்	7.75.7
	     தண்டுறை ஆடி விழுத்தும்	
	நீரில் நின்றடி போற்றி	
	     நின்மலா கொள்என ஆங்கே	
	ஆரங் கொண்டஎம் ஆனைக்	
	     காவுடை ஆதியை நாளும்	
	ஈரம் உள்ளவர் நாளும்	
	     எம்மையும் ஆளுடை யாரே.	
		
768	உரவம் உள்ளதோர் உழையின்	7.75.8
	     உரிபுலி அதளுடை யானை	
	விரைகொள் கொன்றையி னானை	
	     விரிசடை மேற்பிறை யானை	
	அரவம் வீக்கிய ஆனைக்	
	     காவுடை ஆதியை நாளும்	
	இரவும் எல்லியும் பகலும்	
	     ஏத்துவார் எமைஉடை யாரே.	
		
769	வலங்கொள் வாரவர் தங்கள்	7.75.9
	      வல்வினை தீர்க்கும் மருந்து	
	கலங்கக் காலனைக் காலாற்	
	     காமனைக் கண்சிவப் பானை	
	அலங்கல் நீர்பொரும் ஆனைக்	
	      காவுடை ஆதியை நாளும்	
	இலங்கு சேவடி சேர்வார்	
	      எம்மையும் ஆளுடை யாரே.	
		
770	ஆழி யாற்கருள் ஆனைக்	7.75.10
	     காவுடை ஆதிபொன் னடியின்	
	நீழ லேசர ணாக	
	     நின்றருள் கூர நினைந்து	
	வாழ வல்லவன் றொண்டன்	
	     வண்தமிழ் மாலைவல்லார் போய்	
	ஏழு மாபிறப் பற்று	
	     எம்மையும் ஆளுடை யாரே.	
		
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்,
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page