சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.74 திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

751

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.

7.74.1
752

கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
பழவினை உள்ளன பற்றறுத் தானை.

7.74.2
753

கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்
புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும்
போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்
தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை.

7.74.3
754

பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
அருவினை உள்ளன ஆசறுத் தானை.

7.74.4
755

பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்
பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி
எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
உற்றநோய் இற்றையே உறவொழித் தானை.

7.74.5
756

புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை.

7.74.6
757

வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
உலகறி பழவினை அறவொழித் தானை.

7.74.7
758

ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்
புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை
அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை.

7.74.8
759

புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்
பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
இலங்குமார் முத்தினோ டினமணி இடறி
இருகரைப் பெருமரம் பீழந்துகொண் டெற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை
மேலைநோய் இம்மையே வீடுவித் தானை.

7.74.9
760

மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி அன்றிமற் றறியான்
அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே.

7.74.10

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page