|
729 |
எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே. | 7.72.1 |
730 | புரமவை எரிதர வளைந்தவில் லினன்அவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி இரந்தவன் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே. | 7.72.2
|
731 | நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ளேறணி அடிகள்தம் இடம்வலம் புரமே. | 7.72.3
|
732 | கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்
தெங்கொடு பனைபழம் படுமிடந் தேவர்கள்
தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர
எங்கள தடிகள்நல் இடம்வலம் புரமே. | 7.72.4
|
733 | கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதில் சிறுமையின் நிரவவல் லவனிடம்
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்
திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே. | 7.72.5
|
734 | கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்
நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அணைகரை இடம்வலம் புரமே. | 7.72.6
|
735 | நரிபுரி காடரங் காநடம் ஆடுவர்
வரிபுரி பாடநின் றாடும்எம் மான்இடம்
புரிசுரி வரிகுழல் அரிவையோர் பால்மகிழ்ந்
தெரியெரி யாடிதன் இடம்வலம் புரமே. | 7.72.7
|
736 | பாறணி முடைதலை கலனென மருவிய
நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய
மாறணி வருதிரை வயலணி பொழிலது
ஏறுடை அடிகள்தம் இடம்வலம் புரமே. | 7.72.8
|
737 | சடசட விடுபெணை பழம்படும் இடவகை
படவட கத்தொடு பலிகலந் துலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
இடிகரை மணலடை இடம்வலம் புரமே. | 7.72.9
|
738 | குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே. | 7.72.10
|
739 | வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்தம் இடம்வலம் புரத்தினை
அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே. | 7.72.11
|