சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

7.70 திருவாவடுதுறை

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

709

கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.1
710

மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்
கருத்த ழிந்துனக் கேபொறை ஆனேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.2
711

ஒப்பி லாமுலை யாளரு பாகா
உத்த மாமத்த மார்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே
மூவ ருக்கருள் செய்யவல் லானே
செப்ப ஆல்நிழற் கீழிருந் தருளுஞ்
செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.3
712

கொதியி னால்வரு காளிதன் கோபங்
குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயால்
மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னாலிமை யோர்தொழு தேத்தும்
விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.4
713

வந்த வாளரக் கன்வலி தொலைத்து
வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
வெந்த வெண்பொடி பூசவல் லானே
வேட னாய்விச யற்கருள் புரிந்த
இந்து சேகர னேஇமை யோர்சீர்
ஈச னேதிரு வாவடு துறையுள்
அந்த ணாஎனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.5
714

குறைவி லாநிறை வேகுணக் குன்றே
கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை அன்றிமற் றடியேன்
ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.6
715

வெய்ய மாகரி ஈருரி யானே
வேங்கை ஆடையி னாய்விதி முதலே
மெய்ய னேஅடல் ஆழியன் றரிதான்
வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிகழ் ஒளியே
செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.7
716

கோதி லாவமு தேஅருள் பெருகு
கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே
பசுப தீபர மாபர மேட்டீ
தீதி லாமலை யேதிரு வருள்சேர்
சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.8
717

வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாவெயி றாமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.9
718

வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
சாத லும்பிறப் பும்மறுப் பாரே.

7.70.10

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page