சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

7.69 திருவடமுல்லைவாயில்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

698

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்களென் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்து
மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

7.69.1
699

கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றா யென்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

7.69.2
700

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழமன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் மரசே
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

7.69.3
701

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளல்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுப தாபரஞ் சுடரே.

7.69.4
702

சந்தன வேருங் காரகிற் குறடுந்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

7.69.5
703

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையால் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

7.69.6
704

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

7.69.7
705

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் தன்னையாட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

7.69.8
706

மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

7.69.9
707

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

7.69.10
708

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவலா ரூரன்
உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையு மின்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே.

7.69.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - கொடியிடைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page