சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.67 திருவலிவலம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

677

ஊனங் கைத்துயிர்ப் பாயுல கெல்லாம்
ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
வானங் கைத்தவர்க் கும்மளப் பரிய
வள்ள லையடி யார்கள்தம் உள்ளத்
தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந்
தேச னைத்திளைத் தற்கினி யானை
மானங் கைத்தலத் தேந்தவல் லானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7.67.1
678

பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
பாடியா டும்பத்தர்க் கன்புடை யானைச்
செல்லடி யேநெருக் கித்திறம் பாது
சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை
நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை
நானுறு குறையறிந் தருள்புரி வானை
வல்லடி யார்மனத் திச்சை உளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7.67.2
679

ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை
ஆதியந் தம்பணி வார்க்கணி யானைக்
கூழைய ராகிப்பொய் யேகுடிஓம்பிக்
குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்
வாழியர்க் கேவழு வாநெறி காட்டி
மறுபி றப்பென்னை மாசறுத் தானை
மாழையொண் கண்ணுமை யைமகிழ்ந் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7.67.3
680

நாத்தான் உன்றிற மேதிறம் பாது
நண்ணியண் ணித்தமு தம்பொதிந் தூறும்
ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும்
அளவி றந்தபல தேவர்கள் போற்றுஞ்
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்
துருவி மால்பிர மன்னறி யாத
மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7.67.4
681

நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரசரும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை அறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டியென் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்க நின்றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7.67.5
682

பாடுமா பாடிப் பணியுமா றறியேன்
பனுவுமா பனுவிப் பரவுமா றறியேன்
தேடுமா தேடித் திருத்துமா றறியேன்
செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன்
கூடுமா றெங்ஙன மோவென்று கூறக்
குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
வாடிநீ வாளா வருந்தலென் பானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7.67.6
683

பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
சந்தித் ததிற லாற்பணி பூட்டித்
தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச்
சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ்
சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7.67.7
684

எவ்வவர் தேவர் இருடிகள் மன்னர்
எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
அவ்வவர் வேண்டிய தேஅருள் செய்து
அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை
இவ்வவர் கருணையெங் கற்பகக் கடலை
எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
வவ்வியென் ஆவி மனங்கலந் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7.67.8
685

திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத்
திறல ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்
பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும்
பின்னை யாய்முன்ன மேமுளைத் தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவா
தடிப ணிந்தறி தற்கரி யானை
வரையின் பாவை மணாளனெம் மானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7.67.9
686

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மாலுதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோண்மிசைக் களேபரந் தன்னைச்
சுமந்த மாவிர தத்தகங் காளன்
சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
மான்று சென்றணை யாதவன் றன்னை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7.67.10
687

கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்
கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்
மன்னும் நாவலா ரூரன்வன் றொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
உள்ளத் தாலுகந் தேத்தவல் லார்போய்
மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே.

7.67.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - மாழையங்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page