7.66 திருவாவடுதுறை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

672

மறைய வனொரு மாணிவந் தடைய
வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மானென்றெப் போதும்
ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

7.66.1
673

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச்
சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

7.66.2
674

திகழும் மாலவன் ஆயிரம் மலரால்
ஏத்து வானொரு நீண்மலர் குறையப்
புகழி னாலவன் கண்ணிடந் திடலும்
புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித்
தேவ தேவநின் றிறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

7.66.3
675

வீரத் தாலொரு வேடுவ னாகி
விசைத்தோர் கேழலைத் துரந்துசென் றணைந்து
போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப்
புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
வாரத் தாலுன நாமங்கள் பரவி
வழிபட் டுன்றிற மேநினைந் துருகி
ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

7.66.4
676

ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுல காளப்
புகழி னாலருள் ஈந்தமை அறிந்து
மிக்க நின்கழ லேதொழு தரற்றி
வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மானுனை அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

7.66.5

இப்பதிகத்தில் 6-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

7.66.6-10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page