7.65 திருநின்றியூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

665	திருவும் வண்மையுந் திண்திறல் அரசும்	7.65.1
	    சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு	
	மருவு கோச்செங்க ணான்தனக் களித்த	
	    வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்	
	பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்	
	    பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்	
	தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்	
	    திரட்டுந் தென்திரு நின்றியூ ரானே.	
		
666	அணிகொள் ஆடையம் பூண்அணி மாலை	7.65.2
	    அமுது செய்தமு தம்பெறு சண்டி	
	இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல்	
	    ஈன்ற வன்திரு நாவினுக் கரையன்	
	கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற	
	    காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்	
	திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும்	
	    செல்வத் தென்திரு நின்றியூ ரானே.	
		
667	மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி	7.65.3
	    மூன்று நூறுவே தியரொடு நுனக்கு	
	ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி	
	   ஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப்	
	பத்தி செய்தஅப் பரசுரா மற்குப்	
	   பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்	
	சித்தர் வானவர் தானவர் வணங்கும்	
	   செல்வத் தென்திரு நின்றியூ ரானே.	
		
668	இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்	7.65.4
	   எழுந்து தன்முலைக் கலசங்கள் ஏந்திச்	
	சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந்	
	   தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்	
	பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப்	
	   பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்	
	நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்	
	   அளிக்குந் தென்திரு நின்றியூ ரானே.	
		
669	வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து	7.65.5
	    வான நாடுநீ ஆள்கென அருளிச்	
	சந்தி மூன்றிலுந் தாபரம் நிறுத்திச்	
	   சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச்	
	சிந்து மாமணி அணிதிருப் பொதியிற்	
	   சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்	
	செந்தண் மாமலர்த் திருமகள் மருவும்	
	   செல்வத் தென்திரு நின்றியூ ரானே.	
		
670	காது பொத்தரைக் கின்னரர் உழுவை	7.65.6
	   கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங்	
	கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்	
	   கோல ஆல்நிழற் கீழ்அறம் பகர	
	ஏதஞ் செய்தவர் எய்திய இன்பம்	
	   யானுங் கேட்டுநின் இணைஅடி அடைந்தேன்	
	நீதி வேதியர் நிறைபுகழ் உலகில்	
	   நிலவு தென்திரு நின்றியூ ரானே.	
		
671	கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க	7.65.7
	   நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே	
	பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற	
	   பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்	
	பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்	
	   பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்	
	நீடு மாடங்கள் மாளிகை தோறும்	
	   நிலவு தென்திரு நின்றியூ ரானே.	
	இப்பதிகத்தில் 8-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின.	7.65.8-10

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமிவரதர், தேவியார் - உலகநாயகியம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page