சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.63 நம்பி என்ற திருப்பதிகம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

645

மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

7.63.1
646

திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால்
சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம்
அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்
அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்
தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி
தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

7.63.2
647

வருந்த அன்றுமத யானை உரித்த
வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம்
அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த
அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்
புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி
பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

7.63.3
648

ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
உரிய நம்பிதெரி யம்மறை அங்கங்
கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக்
குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ்
சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி
செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்
ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

7.63.4
649

குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக்
குலைத்த நம்பிசிலை யாவரை கையிற்
பற்று நம்பிபர மானந்த வெள்ளம்
பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால்
மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன்
மதியி லேன்படு வெந்துயர் எல்லாம்
எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

7.63.5
650

அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்
ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி
சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடந்
தரித்த நம்பிசம யங்களின் நம்பி
தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

7.63.6
651

பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும்
பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே
உலகு நம்பிஉரை செய்யும தல்லால்
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
தென்னை நம்பிஎம் பிரானாய நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

7.63.7
652

சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி
தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய
வருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார்
அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி
அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

7.63.8
653

காண்டு நம்பிகழற் சேவடி என்றுங்
கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
ஆண்டு நம்பியவர் முன்கதி சேர
அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத்
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி
ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

7.63.9
654

கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை
கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம்
பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா...
............ ............ ............ ...........
............ ............ ............ ...........

7.63.10

இச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page