7.61 திருவேகம்பம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

624

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.1
625

உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.2
626

திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி யேத்தி வழிபடப் பெற்ற
*பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
*காமாட்சியம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பர
நாதரே பெரியகம்பர்.

7.61.3
627

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் புமலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வறே.

7.61.4
628

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யிற்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
*நல்ல கம்பனை எங்கள் பிரானை
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
*உருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு
நல்லகம்பனென்றுபெயர்.

7.61.5
629

திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.6
630

விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாம்உகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.7
631

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.8
632

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுரம் மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.9
633

எள்க லின்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
*கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

*திருமாலாற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப்
பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர்.

7.61.10
634

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மானென்றெப் போதுங்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானைக்
குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்
நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.

7.61.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page