7.59 திருவாரூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்	
  போக முந்திரு வும்புணர்ப் பானைப்	
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்	
  பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை	
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா	
  எம்மா னைஎளி வந்தபி ரானை	
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி	
  ஆரூரானை மறக்கலு மாமே.	7.59.1
	
கட்ட மும்பிணி யுங்களை வானைக்	
  காலற் சீறிய காலுடை யானை	
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை	
  விரவி னால்விடு தற்கரி யானைப்	
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை	
  வாரா மேதவி ரப்பணிப் பானை	
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை	
   ஆரூரானை மறக்கலு மாமே.	7.59.2
	
கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்	
  கலைக்கெ லாம்பொருளாய்உடன் கூடிப்	
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்	
  பகலுங் கங்குலும் ஆகிநின் றானை	
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை	
  உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை	
ஆர்க்கின் றகட லைமலை தன்னை	
  ஆரூரானை மறக்கலு மாமே.	7.59.3
	
செத்த போதினில் முன்னின்று நம்மைச்	
  சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்	
வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே	
  மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே	
முத்தன் எங்கள் பிரான்என்று வானோர்	
  தொழநின் றதிமில் ஏறுடை யானை	
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை	
  ஆரூரானை மறக்கலு மாமே.	7.59.4
	
செறிவுண் டேல்மனத் தாற்தெளி வுண்டேல்	
  தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்	
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்	
  வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்	
பொறிவண்டாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றைப்	
  பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை	
அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே	
  ஆரூரானை மறக்கலு மாமே.	7.59.5
	
பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று	
  பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி	
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்	
  வாரா மேதவிர்க் கும்விதி யானை	
வள்ளல் எந்தமக் கேதுணை என்று	
  நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்	
அள்ள லங்கழ னிப்பழ னத்தணி	
  ஆரூரானை மறக்கலு மாமே.	7.59.6
	
கரியா னைஉரி கொண்டகை யானைக்	
  கண்ணின் மேல்ஒரு கண்ணுடையானை	
வரியா னைவருத் தங்களை வானை	
  மறையா னைக்குறை மாமதி சூடற்	
குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்	
  ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்(கு)	
அரியா னைஅடி யேற்கெளி யானை	
  ஆரூரானை மறக்கலு மாமே.	7.59.7
	
வாளா நின்று தொழும்அடி யார்கள்	
  வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்	
நாணா ளும்மலர் இட்டுவணங் கார்	
  நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்	
கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்	
  கிளைக்கெ லாந்துணை யாம்எனக் கருதி	
ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்	
  ஆரூரானை மறக்கலு மாமே.	7.59.8
	
விடக்கை யேபெருக் கிப்பல நாளும்	
  வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்	
கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்	
  கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும்	
இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்	
  சடையா னைஉமை யாளையோர் பாகத்	
தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை	
  ஆரூரானை மறக்கலு மாமே.	7.59.9
	
ஒட்டி ஆட்கொண்டு போய்ஒளித் திட்ட	
  உச்சிப் போதனை நச்சர வார்த்த	
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்	
  பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்	
கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக்	
  காத லாற்கடல் சூர்தடிந் திட்ட	
செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ	
  ஆரூரானை மறக்கலு மாமே.	7.59.10
	
ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம்	
  உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக்	
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை	
  முடியன் காரிகை காரண மாக	
ஆரூ ரைம்மறத் தற்கரி யானை	
  அம்மான் தன்திருப் பேர்கொண்ட தொண்டன்	
ஆரூ ரன்னடி நாய்உரை வல்லார்	
  அமர லோகத் திருப்பவர் தாமே.	7.59.11

திருச்சிற்றம்பலம் 


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page