சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.55 திருப்புன்கூர்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

560

அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்றமர் நலியின்
இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

7.55.1
561

வைய கமுற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்
செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

7.55.2
562

ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்ததண் டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

7.55.3
563

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.

7.55.4
564

கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை உண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

7.55.5
565

இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை
அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

7.55.6
566

போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்
தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

7.55.7
567

மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல்
காவ லாளரென் றேவிய பின்னை
ஒருவ நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கஅருள் செய்த
தேவ தேவநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

7.55.8
568

அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம்
அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

7.55.9
569

கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானை
உம்பர் ஆளியை உமையவள் கோனை
ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை இலரே.

7.55.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.

சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார்
கண்டு தொழுது சுவாமீ! இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி
வருந்துகிறோம், ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய,
மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன, அவர்கள் பன்னிரண்டு
வேலி நிலந்தருகிறோமென்னக் கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும்,
மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால் மழை தணிந்து
பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி
மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.
திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page