7.54 திருவொற்றியூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்	
  அதுவும் நான்படப் பாலதொன் றானால்	
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்	
  பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்	
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்	
  மற்று நான்அறி யேன்மறு மாற்றம்	
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்	
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.	7.54.1
	
கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய்	
    காதற் சங்கிலி காரண மாக	
எட்டி னால்திக ழுந்திரு மூர்த்தி	
    என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்	
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்	
   பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை	
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்	
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.	7.54.2
	
கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே	
  கட்டி யேபலர்க் குங்களை கண்ணே	
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே	
  அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்	
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல	
  வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி	
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்	
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.	7.54.3
	
ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா	
  லியாவ ராகிலென் அன்புடை யார்கள்	
தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்	
  சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்	
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்	
  கொள்வ தேகணக் குவழக் காகில்	
ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்	
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.	7.54.4
	
வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்	
  உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்	
சுழித்த லைப்பட்ட நீரது போலச்	
  சுழல்கின் றேன்சுழல் கின்றதென உள்ளம்	
கழித்த லைப்பட்ட நாயது போல	
  ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை	
ஒழித்து நீஅரு ளாயின செய்யாய்	
  ஒற்றி யூர்எனும் ஊருறை வானே.	7.54.5
	
மானை நோக்கியர் கண்வலைப் பட்டு	
  வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்	
தேனை ஆடிய கொன்றையி னாய்உன்	
  சீல முங்குண முஞ்சிந்தி யாதே	
நானும் இத்தனை வேண்டுவ தடியேன்	
  உயிரொ டும்நர கத்தழுந் தாமை	
ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்	
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.	7.54.6
	
மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன்	
  நெஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்	
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற	
  பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன்	
முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்	
  கடவ தென்னுனை நான்மற வேனேல்	
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்	
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.	7.54.7
	
கூடினாய் மலை மங்கையை நினையாய்	
  கங்கை ஆயிர முகம்உடை யாளைச்	
சூடி னாயென்று சொல்லிய புக்கால்	
  தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே	
வாடி நீயிருந் தென்செய்தி மனனே	
  வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி	
ஊடி னாலினி ஆவதொன் றுண்டே	
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.	7.54.8
	
மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்	
  மைந்த னேமணி யேமண வாளா	
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்	
  அழையேற் போகுரு டாஎனத் தரியேன்	
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்	
  முக்க ணாமுறை யோமறை யோதீ	
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்	
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.	7.54.9
	
ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்	
  ஒற்றி யூருறை செல்வனை நாளும்	
ஞாலந் தான்பர வப்படு கின்ற	
  நான்ம றையங்கம் ஓதிய நாவன்	
சீலந் தான்பெரி தும்மிக வல்ல	
  சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த	
பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப்	
  பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.	7.54.10

திருச்சிற்றம்பலம் 

 • இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர்,
  தேவியார் - வடிவுடையம்மை.

இது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்குச்
சூளுரைசெய்து மணந்துமகிழ்ந் திருக்கையில் திருவாரூர்
வீதிவிடங்கப்பெருமானுடய திருவோலக்கத் தரிசனஞ்செய்வதற்கின்றி
நெடுநாள் பிரிந்திருக்கின்றோமேயென்னும் ஞாபகமுண்டாகப்
பரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து
திருவொற்றியூரெல்லையைக் கடந்தவளவில் நேத்திரங்களுக்கு
அபாவந்தோன்ற வருந்தித் துதிசெய்த பதிகம்.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page