7.53 திருக்கடவூர் மயானம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

மருவார் கொன்றை மதிசூடி	
  மாணிக் கத்தின் மலைபோல	
வருவார் விடைமேல் மாதோடு	
  மகிழ்ந்து பூதப் படைசூழத்	
திருமால் பிரமன் இந்திரற்கும்	
  தேவர் நாகர் தானவர்க்கும்	
பெருமான் கடவூர் மயானத்துப்	7.53.1
  பெரிய பெருமா னடிகளே.	
	
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்	
  மார்பர் வேத கீதத்தர்	
கண்ணார் நுதலர் நகுதலையர்	
  கால காலர் கடவூரர்	
எண்ணார் புரமூன் றெரிசெய்த	
  இறைவ ருமையோர் ஒருபாகம்	
பெண்ஆண் ஆவர் மயானத்துப்	7.53.2
  பெரிய பெருமா னடிகளே.	
	
காயும் புலியின் அதளுடையர்	
  கண்டர் எண்டோட் கடவூரர்	
தாயும் தந்தை பல்லுயிர்க்கும்	
  தாமே ஆய தலைவனார்	
பாயும் விடையொன் றதுவேறிப்	
  பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி	
பேய்கள் வாழும் மயானத்துப்	7.53.3
  பெரிய பெருமா னடிகளே.	
	
நறைசேர் மலரைங் கணையானை	
  நயனத் தீயாற் பொடிசெய்த	
இறையா ராவர் எல்லார்க்கும்	
  இல்லை என்னா தருள்செய்வார்	
பறையார் முழவம் பாட்டோடு	
  பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்	
பிறையார் சடையார் மயானத்துப்	7.53.4
  பெரிய பெருமா னடிகளே.	
	
கொத்தார் கொன்றை மதிசூடிக்	
  கோள்நா கங்கள் பூணாக	
மத்த யானை உரிபோர்த்து	
  மருப்பும் ஆமைத் தாலியார்	
பத்தி செய்து பாரிடங்கள்	
  பாடி ஆடப் பலிகொள்ளும்	
பித்தர் கடவூர் மயானத்துப்	7.53.5
  பெரிய பெருமா னடிகளே.	
	
துணிவார் கீளுங் கோவணமுந்	
  துதைந்து சுடலைப் பொடியணிந்து	
பணிமேல் இட்ட பாசுபதர்	
  பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்	
திணிவார் குழையார் புரமூன்றுந்	
  தீவாய்ப் படுத்த சேவகனார்	
பிணிவார் சடையார் மயானத்துப்	7.53.6
  பெரிய பெருமா னடிகளே.	
	
காரார் கடலின் நஞ்சுண்ட	
  கண்டர் கடவூர் உறைவாணர்	
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து	
  சிதைய விரலா லூன்றினார்	
ஊர்தான் ஆவ துலகேழும்	
  உடையார்க் கொற்றி யூராரூர்	
பேரா யிரவர் மயானத்துப்	7.53.7
  பெரிய பெருமா னடிகளே.	
	
வாடா முலையாள் தன்னோடும்	
  மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்	
கோடார் கேழற் பின்சென்று	
  குறுகி விசயன் தவமழித்து	
நாடா வண்ணஞ் செருச்செய்து	
  ஆவ நாழி நிலையருள்செய்	
பீடார் சடையார் மயானத்துப்	7.53.8
  பெரிய பெருமா னடிகளே.	
	
வேழம் உரிப்பர் மழுவாளர்	
  வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்	
ஆழி அளிப்பர் அரிதனக்கன்(று)	
  ஆனஞ் சுகப்பர் அறமுரைப்பர்	
ஏழைத் தலைவர் கடவூரில்	
  இறைவர் சிறுமான் மறிக்கையர்	
பேழைச் சடையர் மயானத்துப்	7.53.9
  பெரிய பெருமா னடிகளே.	
	
மாட மல்கு கடவூரில்	
  மறையோர் ஏத்தும் மயானத்துப்	
பீடை தீர அடியாருக்	
  கருளும் பெருமா னடிகள்சீர்	
நாடி நாவ லாரூரன்	
  நம்பி சொன்ன நற்றமிழ்கள்	
பாடு மடியார் கேட்பார்மேற்	7.53.10
  பாவம் ஆன பறையுமே.	

திருச்சிற்றம்பலம் 

 • இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page