சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.50 திருப்புனவாயில்

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

508

சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.

7.50.1
509

கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே.

7.50.2
510

தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும்
நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராய்ப்
புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே.

7.50.3
511

வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும்
பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல்
கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.

7.50.4
512

நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும்
நல்லான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டுபோய்ப்
புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.

7.50.5
513

மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.

7.50.6
514

ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்
பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே.

7.50.7
515

கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.

7.50.8
516

எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.

7.50.9
517

பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.

7.50.10

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழம்பதிநாயகர்,
தேவியார் - பரங்கருணைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page