சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.49 திருமுருகன்பூண்டி

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

498

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

7.49.1
499

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

7.49.2
500

பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவ மொன் றறியார்
*உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங்
கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

*உயிர் - உசிர் என மருவியது.

7.49.3
501

பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்
கட்டி வெட்டன ராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங்
கூறை கொள்ளு மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

7.49.4
502

தயங்கு தோலை உடுத்த சங்கரா
சாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளடு முருகன்
பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

7.49.5
503

விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

7.49.6
504

வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்ற யலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும்
உத்திரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் எது காவல்கொண்
டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

7.49.7
505

படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங் கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

7.49.8
506

சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைக லனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

7.49.9
507

முந்தி வானவர் தாந்தொழு முருகன்
பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர்
பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்
ஒன்றுந் தாமி லரே.

7.49.10

கழறிற்றறிவாரென்னுஞ் சேரமான்பெருமானாயனார் கொடுத்த
திரவியங்களை பரிசனங்கள் தலையில் எடுப்பித்துக்கொண்டு
திருமுருகன்பூண்டிக்குச் சமீபத்தில் எழுந்தருளும்போது பரமசிவத்தின்
கட்டளையினால் பூதங்கள் வேடுவர்களாகிவந்து அந்தப்பரிசனங்களை
அடித்துப் பொருள்களைப் பறித்துப் போயின. அப்போது சுந்தரமூர்த்தி
சுவாமிகள் இந்தப் பதிகமோதிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டது.

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆவுடைநாயகர்,
தேவியார் - ஆவுடைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page