7.48 திருப்பாண்டிக்கொடுமுடி

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

இப்பாடலைக் கேட்க:-

Get the Flash Player to see this player.

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

488	மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்	7.48.1
	    பாத மேமனம் பாவித்தேன்	
	பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற	
	    வாத தன்மைவந் தெய்தினேன்	
	கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை	
	    யூரிற் பாண்டிக் கொடுமுடி	
	நற்ற வாஉனை நான்ம றக்கினும்	
	    சொல்லும் நாநமச்சி வாயவே.	
		
489	இட்ட னும்மடி ஏத்து வார்இகழ்ந்	7.48.2
	    திட்ட நாள்மறந் திட்டநாள்	
	கெட்ட நாள்இவை என்ற லாற்கரு	
	    தேன்கி ளர்புனற் காவிரி	
	வட்ட வாசிகை கொண்ட டிதொழு	
	    தேத்து பாண்டிக் கொடுமுடி	
	நட்ட வாவஉனை நான்ம றக்கினும்	
	    சொல்லும் நாநமச்சி வாயவே.	
		
490	ஓவு நாள்உணர் வழியும் நாள்உயிர்	7.48.3
	    போகும் நாள்உயர் பாடைமேல்	
	காவும் நாள்இவை என்ற லாற்கரு	
	    தேன்கி ளர்புனற் காவிரி	
	பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்	
	    சோதி பாண்டிக் கொடுமுடி	
	நாவ லாஉனை நான்ம றக்கினும்	
	    சொல்லும் நாநமச்சி வாயவே.	
		
491	எல்லை யில்புகழ் எம்பி ரான்எந்தை	7.48.4
	    தம்பி ரான்என்பொன் மாமணி	
	கல்லை உந்தி வளம்பொ ழிந்திழி	
	    காவி ரியதன் வாய்க்கரை	
	நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை	
	    யூரிற் பாண்டிக் கொடுமுடி	
	வல்ல வாவஉனை நான்ம றக்கினும்	
	    சொல்லும் நாநமச்சி வாயவே.	
		
492	அஞ்சி னார்க்கரண் ஆதி என்றடி	7.48.5
	    யேனும் நான்மிக அஞ்சினேன்	
	அஞ்சல் என்றடித் தொண்ட னேற்கருள்	
	    நல்கி னாய்க்கழி கின்றதென்	
	பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்	
	   தாடு பாண்டிக் கொடுமுடி	
	நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞம்	
	    சொல்லும் நாநமச்சி வாயவே.	
		
493	ஏடு வானிளந் திங்கள் சூடினை	7.48.6
	    என்பின் கொல்புலித் தோலின்மேல்	
	ஆடு பாம்பத ரைக்க சைத்த	
	    அழக னேயந்தண் காவிரிப்	
	பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்	
	   சோதி பாண்டிக் கொடுமுடிச்	
	சேட னேயஉனை நான்ம றக்கினும்	
	    சொல்லும் நாநமச்சி வாயவே.	
		
494	விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்	7.48.7
	   தேன்வி னைகளும் விண்டனன்	
	நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற	
	      நின்ற காவிரிக் கோட்டிடைக்	
	குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்	
	    தாடு பாண்டிக் கொடுமுடி	
	விரும்ப னேயஉனை நான்ம றக்கினும்	
	    சொல்லும் நாநமச்சி வாயவே.	
		
495	செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரம்	7.48.8
	    தீயெ ழச்சிலை கோலினாய்	
	வம்பு லாங்குழ லாளைப் பாகம்	
	    அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்	
	கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்	
	    ஆடு பாண்டிக் கொடுமுடி	
	நம்ப னேஉனை நான்ம றக்கினும்	
	    சொல்லும் நாநமச்சி வாயவே.	
		
496	சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை	7.48.9
	   தம்பி ரான்என்பொன் மாமணியென்று	
	பேரெ ணாயிர கோடி தேவர்	
	   பிதற்றி நின்று பிரிகிலார்	
	நார ணன்பிர மன்தொ ழுங்கறை	
	   யூரிற் பாண்டிக் கொடுமுடிக்	
	கார ணாஉனை நான்ம றக்கினும்	
	    சொல்லும் நாநமச்சி வாயவே.	
		
497	கோணி யபிறை சூடி யைக்கறை	7.48.10
	    யூரிற் பாண்டிக் கொடுமுடி	
	பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்	
	   பித்த னைப்பிறப் பில்லியைப்	
	பாணு லாவரி வண்ட றைகொன்றைத்	
	   தார னைப்படப் பாம்பரை	
	நாண னைத்தொண்டன் ஊரன் சொல்இவை	
	  சொல்லு வார்க்கில்லை துன்பமே.	

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுமுடிநாதர், தேவியார் - பண்மொழியாளம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page