சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.43 திருமுதுகுன்றம்

பண் - கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

435

நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார்
துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே.

7.43.1
436

ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி
ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ
வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய்
மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே.

7.43.2
437

தொண்டர்கள் பாட விண்ணோர்க ளேத்த உழிதர்வீர்
பண்டகந் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர்
மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே.

7.43.3
438

இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென்
விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர்
அளைப்பிரி யாவர வல்கு லாளடு கங்கைசேர்
முளைப்பி றைச்சென் னிச்சடை முடிமுது குன்றரே.

7.43.4
439

ஆடி அசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும்
பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ
மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம்
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.

7.43.5
440

இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக்
குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள்
முழைவளர் ஆளி முழக்க றாமுது குன்றரே.

7.43.6
441

சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச்சே டிச்சிகள்
மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே
குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள்
முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே.

7.43.7
442

அந்தி திரிந்தடி யாரும் நீரும் அகந்தொறுஞ்
சந்தி கள்தோறும் பலிக்குச் செல்வது தக்கதே
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
முந்தி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.

7.43.8
443

செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய
அட்டு மின்சில் பலிக்கென் றகங்கடை நிற்பதே
பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ
முட்டி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.

7.43.9
444

எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிற ரென்சொலார்
பத்தியி னாலிடு வாரி டைப்பலி கொண்மினோ
எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல்
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரே.

7.43.10
445

முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப்
பித்தனொப் பானடித் தொண்ட னூரன் பிதற்றிவை
தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார்
எத்தவத் தோர்களு மேத்து வார்க்கிடர் இல்லையே.

7.43.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழமலைநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page