சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.42 திருவெஞ்சமாக்கூடல்

பண் - கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

425

எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடு
மிலவங்கந் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

7.42.1
426

குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்
குடமாமணி சந்தனமும் அகிலுந்
துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்
மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

7.42.2
427

வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார்
வடிவேற்கண் நல்லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாட் டெங்குங்
குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

7.42.3
428

பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணா ரகிலுந் நலசா மரையும்
அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவுங் குழலும் இயம்ப
மடவார் நடமாடு மணியரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

7.42.4
429

துளைவெண் குழையுஞ் சுருள்வெண் டோடுந்
தூங்குங்காதிற் றுளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க்கொன் றையினாய்
கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய்
பிறவாதவனே பெறுதற் கரியாய்
வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

7.42.5
430

தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய்
சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்சடையாய்
உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார்
புரந்தீயெழ ஓடுவித்தாய் அழகார்
முழவா ரொலிபா டலோடா டலறா
முதுகாடரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

7.42.6
431

கடமா களியா னையுரித் தவனே
கரிகாடிடமா அனல்வீசி நின்று
நடமா டவல்லாய் நரையே றுகந்தாய்
நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே
படமா யிரமாம் பருத்துத்திப் பைங்கண்
பகுவாய் எயிற்றோடழ லேஉமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

7.42.7
432

காடும் மலையுந் நாடு மிடறிக்
கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ்
சேட னுறையும் மிடந்தான் விரும்பி
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
பாடல் முழவுங் குழலு மியம்பப்
பணைத்தோளியர் பாடலோ டாடலறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

7.42.8
433

கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே
கொடுகொட்டி யோர்வீணை யுடையவனே
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்
பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார்
துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

7.42.9
434

வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார்
வடிவேற்க ணல்லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்
வேண்டுதி யேயென்று தான்விரும்பி
வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன்
வனப்பகையப்பன் வன்றொண்டன் சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும் வல்லார்
சிவலோகத் திருப்பது திண்ணமன்றே.

7.42.10

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - விகிர்தேசுவரர், தேவியார் - விகிர்தேசுவரி.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page