7.40 திருக்கானாட்டுமுள்ளூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை	
  மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்	
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்	
  பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை	
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று	
  மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்	
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்	7.40.1
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.	
	
ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்	
  ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்	
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்	
  புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்	
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த	
  திருத்தக்க அந்தணர்கள் ஓதுநகர் எங்கும்	
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்	7.40.2
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.	
	
இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை	
  இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்	
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடும்	
  சடையானை விடையானைச் சோதியெனும் சுடரை	
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்கள் ஏறி	
  அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே	
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்	7.40.3
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.	
	
பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்	
  புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்	
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி	
  ஞாயிறாய் மதியமாய் நின்றஎம் பரனைப்	
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்	
  படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்	
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்	7.40.4
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.	
	
செருக்குவாய்ப் பைங்கண்வெள் அரவரையி னானைத்	
  தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை	
முருக்குவாய் மலர்ஒக்குந் திருமேனி யானை	
  முன்னிலையாய் முழுதுலகம் ஆயபெரு மானை	
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்	
  வேள்வியிருந் திருநிதியம் வழங்குநகர் எங்கும்	
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்	7.40.5
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.	
	
விடைஅரவக் கொடிஏந்தும் விண்ணவர்தங் கோனை	
  வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்	
அடியிணையுந் திருமுடியுங் காணஅரி தாய	
  சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்	
உடைஅவிழக்குழல் அவிழக் கோதைகுடைந் தாடக்	
  குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்	
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்	7.40.6
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.	
	
அருமணியை முத்தினை ஆன்அஞ்சும் ஆடும்	
  அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்	
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்	
  தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்	
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்	
  கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேல்	
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்	7.40.7
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.	
	
இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்	
  ஈசன்தன் எண்டோள்கள் வீசியெரி ஆடக்	
குழைதழுவு திருக்காதிற் கோளரவம் அசைத்துக்	
  கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்	
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே	
  தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே	
கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக்	7.40.8
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.	
	
குனிவினிய கதிர்மதியம் சூடுசடை யானைக்	
  குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்	
பனிஉதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்	
  பலவுருவுந் தன்உருவே ஆயபெரு மானைத்	
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்	
  தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே	
கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்	7.40.9
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.	
	
தேவியம்பொன் மலைக்கோமன் தன்பாவை ஆகத்	
  தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்	
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு	
  மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்	
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்	
  துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்	
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்	7.40.10
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.	
	
திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்	
  செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்	
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்	
  கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது	
உரையினார் மதயானை நாவலா ரூரன்	
  உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்	
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்	
  வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.	7.40.11

திருச்சிற்றம்பலம் 

 • இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - பதஞ்சலியீசுவரர், தேவியார் - கானார்குழலம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page