7.38 திருவதிகைத் திருவீரட்டானம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

பண் - கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

383	தம்மானை அறியாத சாதியார் உளரே	7.38.1
	     சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்	
	கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்	
	     உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்	
	தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடும்என்னும்	
	    ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்	
	எம்மானை எறிகெடில வடவீரட் டானத்	
	    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.	
		
384	முன்னேயெம் பெருமானை மறந்தென்கொல் மறவா	7.38.2
	    தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்	
	பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்	
	   குன்றமே ஈச¦னென் றுன்னையே புகழ்வேன்	
	அன்னேயென் அத்தாவென் றமரரால் அமரப்	
	   படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை	
	என்னேயென் எறிகெடில வடவீரட் டானத்	
	   துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.	
		
385	விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே	7.38.3
	    விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்தும்	
	கரும்பேயென் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக்	
	    காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை	
	வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும்	
	    வரிஅரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை	
	இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத்	
	   துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.	
		
386	நாற்றானத் தொருவனை நானாய பரனை	7.38.4
	   நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்	
	காற்றானைத் தீயானைக் கடலானை மலையின்	
	   தலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள	
	ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான்	
	   தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்	
	ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத்	
	   துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.	
		
387	சேந்தாய மலைமங்கை திருநிறமும் பரிவும்	7.38.5
	    உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்	
	கூந்தல்தாழ் புனல்மங்கை குயில்அன்ன மொழியாள்	
	   சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி	
	வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி	
	   மறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரி	
	ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்	
	   துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.	
		
388	மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்	7.38.6
	   வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்	
	தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும்	
	   தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற	
	வெம்மான மதகரியின் உரியானை வேத	
	  விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி	
	எம்மானை எறிகெடில வடவீரட் டானத்	
	   துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.	
		
389	வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்கு	7.38.7
	   மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம்	
	பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்	
	  தெண்டோள்எம் பெருமானைப் பெண்பாகம் ஒருபால்	
	செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய்	
	  அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ	
	எய்தானை எறிகெடில வடவீரட் டானத்	
	   துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.	
		
390	பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை	7.38.8
	   பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்	
	தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்	
	  சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி	
	அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமானின்	
	  உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை	
	என்னானை எறிகெடில வடவீரட் டானத்	
	   துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.	
		
391	திருந்தாத வாள் அவுணர் புரமூன்றும் வேவச்	7.38.9
	   சிலைவளைவித் தொருகணையாற் தொழில்பூண்ட சிவனைக்	
	கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய	
	  கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்	
	பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்	
	  உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல்	
	இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்	
	   துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.	
		
392	என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்	7.38.10
	   எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்	
	வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்	
	  வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன	
	அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர்	
	  பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை	
	என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்	
	   துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.	

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page