7.37 திருவாரூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா	7.37.1
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப்	
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்	
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.	
	
பறக்கும்எங் கிள்ளைகாள் பாடும்எம் பூவைகாள்	7.37.2
அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை	
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்	
உறக்கம்இல் லாமையும் உணர்த்தவல் லீர்களே.	
	
சூழும்ஓ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்	7.37.3
ஆளும்அம் பொற்கழல் அடிகளா ரூரர்க்கு	
வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக்	
கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.	
	
சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள்	7.37.4
அக்கிரமங் கள்செய்யும் அடிகளா ரூரர்க்கு	
வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்	
உக்கிரமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.	
	
இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள்	7.37.5
அலைகள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்	
கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும்	
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.	
	
வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள்	7.37.6
அண்டவா ணர்தொழும் அடிகளா ரூரரைக்	
கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய்	
உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.	
	
தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள்	7.37.7
ஆனலங் கொண்டஎம் அடிகளா ரூரர்க்குப்	
பானலங் கொண்டஎம் பணைமுலை பயந்துபொன்	
ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே.	
	
சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள்	7.37.8
அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூரர்க்குப்	
பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும்	
உற்றுமற் றின்மையும் உணர்த்த வல்லீர்களே.	
	
குரவநா றக்குயில் வண்டினம் பாடநின்(று)	7.37.9
அரவம்ஆ டும்பொழில் அந்தணா ரூரரைப்	
பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும்	
உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே.	
	
கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்	7.37.10
ஆடும்அம் பொற்கழல் அடிகளா ரூரரைப்	
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி	
ஊடுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.	
	
நித்தமா கந்நினைந் துள்ளம்ஏத் தித்தொழும்	7.37.11
அத்தன்அம் பொற்கழல் அடிகளா ரூரரைச்	
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்	
பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.	
	
திருச்சிற்றம்பலம் 


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page