7.35 திருப்புறம்பயம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

அங்கம்ஓதி ஓர் ஆறைமேற்றளி
  நின்றும்போந்துவந் தின்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர்
  ஈசனார்எழு நெஞ்சமே
கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள்
  ஏத்திவானவர் தாந்தொழும்
பொங்குமால்விடை ஏறிசெல்வப்
  புறம்பயந்தொழப் போதுமே.		    7.35.1

பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும்
  பண்டையாரலர் பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும்வாழ்க்கையும்
  நினைப்பொழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்
  மகிழும்மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லிநாறும்
  புறம்பயந்தொழப் போதுமே.		    7.35.2

புறந்திரைந்து நரம்பெழுந்து
  நரைத்துநீயுரை யால்தளர்ந்
தறம்புரிந்து நினைப்பதாண்மை
  அரிதுகாண் இஃதறிதியேல்
திறம்பியாதெழு நெஞ்சமேசிறு
  காலைநாமுறு வாணியம்
புறம்பயத்துறை பூதநாதன்
  புறம்பயந்தொழப் போதுமே.		    7.35.3

குற்றொருவரைக் கூறைகொண்டு
  கொலைகள் சூழ்ந்த களவெலாம்
செற்றொருவரைச் செய்ததீமைகள்
  இம்மையேவருந் திண்ணமே
மற்றொருவரைப் பற்றிலேன்மற
  வாதெழுமட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றமேறி
  புறம்பயந்தொழப் போதுமே.		    7.35.4

கள்ளிநீசெய்த தீமையுள்ளன
  பாவமும்பறை யும்படி
தெள்ளிதாஎழு நெஞ்சமேசெங்கண்
  சேவுடைச்சிவ லோகனூர்
துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல்
  தோன்றுதாமரைப் பூக்கள்மேல்
புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும்
  புறம்பயந்தொழப் போதுமே.		    7.35.5

படையெலாம்பக டாரஆளிலும்
  பௌவஞ்சூழ்ந்தர சாளிலும்
கடையெலாம்பிணைத் தேரைவால்கவ
  லாதெழுமட நெஞ்சமே
மடையெலாங்கழு நீர்மலர்ந்து
  மருங்கெலாங்கரும் பாடத்தேன்
புடையெலாம்மணம் நாறுசோலைப்
  புறம்பயந்தொழப் போதுமே.		    7.35.6

முன்னைச்செய்வினை இம்மையில்வந்து
  மூடுமாதலின் முன்னமே
என்னைநீதியக் காதெழுமட
  நெஞ்சமேஎந்தை தந்தையூர்
அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்
  கூடிச்சேரு மணிபொழில்
புன்னைக்கன்னி கழிக்கணாறும்
  புறம்பயந்தொழப் போதுமே.		    7.35.7

மலமெலாம்அறும் இம்மையேமறு
  மைக்கும்வல்வினை சார்கிலா
சலமெலாம்ஒழி நெஞ்சமேஎங்கள்
  சங்கரன்வந்து தங்கும்ஊர்
கலமெலாங்கடல் மண்டுகாவிரி
  நங்கையாடிய கங்கைநீர்
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்
  புறம்பயந்தொழப் போதுமே.		    7.35.8

பண்டரியன செய்ததீமையும்
  பாவமும்பறை யும்படி
கண்டரியன கேட்டியேற்கவ
  லாதெழுமட நெஞ்சமே
தொண்டரியன பாடித்துள்ளிநின்
  றாடிவானவர் தாந்தொழும்
புண்டரீக மலரும்பொய்கை
  புறம்பயந்தொழப் போதுமே.		    7.35.9

துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந்
  துயக்கறாத மயக்கிவை
அஞ்சிஊரன் திருப்புறம்பயத்
  தப்பனைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயந்தொழு
  துய்தும்என்று நினைத்தன
வஞ்சியாதுரை செய்யவல்லவர்
  வல்லவானுல காள்வரே.		    7.35.10

	    - திருச்சிற்றம்பலம் -

 • இத்தலம் சோழ நாட்டிலுள்ளது; இஃது காவிரி வடகரையில் உள்ள 46வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமிபெயர் - சாட்சிவரதேசுவரர்; தேவியார் - கரும்படுசொல்லம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page