சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

7.34 திருப்புகலூர்

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

340

தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்
சார்வினுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
இம்மையேதருஞ் சோறுங்கூறையும்
ஏத்தலாமிடர் கெடலுமாம்
அம்மையேசிவ லோகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே.

7.34.1
341

மிடுக்கிலாதானை வீமனேவிறல்
விசயனேவில்லுக் கிவனென்று
கொடுக்கிலாதானைப் பாரியேயென்று
கூறினுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அடுக்குமேலம ருலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே.

7.34.2
342

காணியேற்பெரி துடையனேகற்று
நல்லனேசுற்றம் நற்கிளை
பேணியேவிருந் தோம்புமேயென்று
பேசினுங்கொடுப் பாரிலை
பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண்
புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆணியாயம ருலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே.

7.34.3
343

நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல்
நடுங்கிநிற்குமிக் கிழவனை
வரைகள்போல்திரள் தோளனேயென்று
வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அரையனாயம ருலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே.

7.34.4
344

வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப்
பாவியைவழக் கில்லியைப்
பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று
பாடினுங்கொடுப் பாரிலை
பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற்
கியாதுமையுற வில்லையே.

7.34.5
345

நலமிலாதானை நல்லனேயென்று
நரைத்தமாந்தரை இளையனே
குலமிலாதானைக் குலவனேயென்று
கூறினுங்கொடுப் பாரிலை
புலமெலாம்வெறி கமழும்பூம்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அலமராதமர் உலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே.

7.34.6
346

நோயனைத்தடந் தோளனேயென்று
நொய்யமாந்தரை விழுமிய
தாயன்றோபுல வோர்க்கெலாமென்று
சாற்றினுங்கொடுப் பாரிலை
போயுழன்றுகண் குழியாதேயெந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற்
கியாதுமையுற வில்லையே.

7.34.7
347

எள்விழுந்திடம் பார்க்குமாகிலும்
ஈக்கும்ஈகிலன் ஆகிலும்
வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று
வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அள்ளற்பட்டழுந் தாதுபோவதற்
கியாதுமையுற வில்லையே.

7.34.8
348

கற்றிலாதானைக் கற்றுநல்லனே
காமதேவனை யொக்குமே
முற்றிலாதானை முற்றனேயென்று
மொழியினுங்கொடுப் பாரிலை
பொத்திலாந்தைகள் பாட்டறாப்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அத்தனாயம ருலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே.

7.34.9
349

தையலாருக்கோர் காமனேயென்றுஞ்
சாலநல்வழக் குடையனே
கையுலாவிய வேலனேயென்று
கழறினுங்கொடுப் பாரிலை
பொய்கையாவியின் மேதிபாய்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
ஐயனாயம ருலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே.

7.34.10
350

செறுவினிற்செழுங் கமலமோங்குதென்
புகலூர்மேவிய செல்வனை
நறவம்பூம்பொழில் நாவலூரன்
வனப்பகையப்பன் சடையன்றன்
சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய
பாடல்பத்திவை வல்லவர்
அறவனாரடி சென்றுசேர்வதற்
கியாதுமையுற வில்லையே.

இது பொன்வேண்டுங் குறிப்புடன் பதிகமோதித் துதி
செய்யவுஞ் சுவாமி கிருபைசெய்யாமையால் மனவெறுப்
புடன் திருமடத்துக்கெழுந்தருளாமல் ஆலயத்தில்
திருப்பணிக்காக வந்திருந்த செங்கற்களைப் பரப்பி
அதன்மேற் பள்ளிகொண்டு துயில்கூர்ந்து அது நீங்கி
யெழுந்தபோது செங்கற்கள் பொன்னாயிருக்கக்கண்டு
மகிழ்ந்து ஓதித் துதிசெய்தருளியது.

7.34.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினியீசுவரர்,
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page