சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

7.33. நமக்கடிகளாகிய - அடிகள்

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

330

பாறுதாங்கிய காடரோபடு
தலையரோமலைப் பாவையோர்
கூறுதாங்கிய குழகரோகுழைக்
காதரோகுறுங் கோட்டிள
ஏறுதாங்கிய கொடியரோசுடு
பொடியரோஇலங் கும்பிறை
ஆறுதாங்கிய சடையரோநமக்
கடிகளாகிய அடிகளே.

7.33.1
331

இட்டிதாகவந் துரைமினோநுமக்
கிசையுமாநினைந் தேத்துவீர்
கட்டிவாழ்வது நாகமோசடை
மேலும்நாறு கரந்தையோ
பட்டியேறுகந் தேறரோபடு
வெண்டலைப்பலி கொண்டுவந்
தட்டியாளவுங் கிற்பரோநமக்
கடிகளாகிய அடிகளே.

7.33.2
332

ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக்
கிசையுமாநினைந் தேத்துவீர்
குன்றிபோல்வதோ ருருவரோகுறிப்
பாகிநீறுகொண் டணிவரோ
இன்றியேயிலர் ஆவரோஅன்றி
உடையராயிலர் ஆவரோ
அன்றியேமிக அறவரோநமக்
கடிகளாகிய அடிகளே.

7.33.3
333

தேனையாடுமுக் கண்ணரோமிகச்
செய்யரோவெள்ளை நீற்றரோ
பானெய்ஆடலும் பயில்வரோதமைப்
பற்றினார்கட்கு நல்லரோ
மானைமேவிய கண்ணினாள்மலை
மங்கைநங்கையை அஞ்சவோர்
ஆனையீருரி போர்ப்பரோநமக்
கடிகளாகிய அடிகளே.

7.33.4
334

கோணல்மாமதி சூடரோகொடு
கொட்டிகாலர் கழலரோ
வீணைதானவர் கருவியோ
விடையேறுவேத முதல்வரோ
நாணதாகவோர் நாகங்கொண்டரைக்
கார்ப்பரோநல மார்தர
ஆணையாகநம் மடிகளோநமக்
கடிகளாகிய அடிகளே.

7.33.5
335

வந்துசொல்லுமின் மூடனேனுக்கு
வல்லவாநினைந் தேத்துவீர்
வந்தசாயினை அறிவரோதம்மை
வாழ்த்தினார்கட்கு நல்லரோ
புந்தியாலுரை கொள்வரோஅன்றிப்
பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ
அன்றியேமிக அறவரோநமக்
கடிகளாகிய அடிகளே.

7.33.6
336

மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக்
கிசையுமாநினைந் தேத்துவீர்
கையிற்சூலம துடையரோகரி
காடரோகறைக் கண்டரோ
வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை
ஏறரோகடை தோறுஞ்சென்
றையங்கொள்ளுமவ் வடிகளோநமக்
கடிகளாகிய அடிகளே.

7.33.7
337

நீடுவாழ்பதி உடையரோஅயன்
நெடியமாலுக்கு நெடியரோ
பாடுவாரையும் உடையரோதமைப்
பற்றினார்கட்கு நல்லரோ
காடுதானரங் காகவேகைகள்
எட்டினோடில யம்பட
ஆடுவாரெனப் படுவரோநமக்
கடிகளாகிய அடிகளே.

7.33.8
338

நமணநந்தியுங் கருமவீரனுந்
தருமசேனனு மென்றிவர்
குமணமாமலைக் குன்றுபோனின்று
தங்கள்கூறையொன் றின்றியே
ஞமணஞாஞண ஞாணஞோணமென்
றோதியாரையு நாணிலா
அமணராற்பழிப் புடையரோநமக்
கடிகளாகிய அடிகளே.

7.33.9
339

படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந்
தேத்தினேன்பணி யீரருள்
வடிவிலான்றிரு நாவலூரன்
வனப்பகையப்பன் வன்றொண்டன்
செடியனாகிலுந் தீயனாகிலுந்
தம்மையேமனஞ் சிந்திக்கும்
அடியனூரனை ஆள்வரோநமக்
கடிகளாகிய அடிகளே.

7.33.10

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page