சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.31 திருஇடையாற்றுத்தொகை

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

310

முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்
சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்
பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி
எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.

7.31.1
311

சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர்
ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்
பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர்
எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே.

7.31.2
312

கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம்
விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய
படங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி
இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே.

7.31.3
313

கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம்
பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர்
கச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை
இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே.

7.31.4
314

நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த
பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர்
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த
இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

7.31.5
315

திங்களூர் திருவா திரையான் பட்டினமூர்
நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்
தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல
எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.

7.31.6
316

கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன்
தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்
எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி
இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.

7.31.7
317

தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர்
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

7.31.8
318

பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர்
தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர்
கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல்
ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

7.31.9
319

ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்
கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.

7.31.10

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page