சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.30 திருக்கருப்பறியலூர்

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

299

சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில்
வைத்துகந்து திறம்பா வண்ணங்
கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக்
கண்டானைக் கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட
மயிலாடுங் கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே.

7.30.1
300

நீற்றாரும் மேனியராய் நினைவார்தம்
உள்ளத்தே நிறைந்து தோன்றுங்
காற்றானைத் தீயானைக் கதிரானை
மதியானைக் கருப்ப றியலூர்க்
கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையாள்
அவளோடுங் கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே.

7.30.2
301

முட்டாமே நாடோறும் நீர்மூழ்கிப்
பூப்பறித்து மூன்று போதுங்
கட்டார்ந்த இண்டைகொண் டடிச்சேர்த்தும்
அந்தணர்தங் கருப்ப றியலூர்
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக்
குழகனைக் கொகுடிக் கோயில்
எட்டான மூர்த்தியை நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே.

7.30.3
302

விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி
வினைபோக வேலி தோறுங்
கருந்தாள வாழைமேற் செங்கனிகள்
தேன்சொரியுங் கருப்ப றியலூர்க்
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள்
அவளோடுங் கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே.

7.30.4
303

பொடியேறு திருமேனிப் பெருமானைப்
பொங்கரவக் கச்சை யானைக்
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை
குதிகொள்ளுங் கருப்ப றியலூர்க்
கொடியேறி வண்டினமுந் தண்டேனும்
பண்செய்யுங் கோகுடிக் கோயில்
அடியேறு கழலானை நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே.

7.30.5
304

பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப்
போற்றிசைத்துப் பூசை செய்து
கையினா லெரியோம்பி மறைவளர்க்கும்
அந்தணர்தங் கருப்ப றியலூர்க்
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலுங் கொகுடிக் கோயில்
ஐயனையென் மனத்தினால் நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே.

7.30.6
305

செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந்
தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின்
கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி
கண்படுக்குங் கருப்ப றியலூர்க்
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள்
அவளோடுங் கொகுடிக் கோயில்
அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே.

7.30.7
306

பறையாத வல்வினைகள் பறைந்தொழியப்
பன்னாளும் பாடி யாடிக்
கறையார்ந்த கண்டத்தன் எண்டோளன்
முக்கண்ணன் கருப்ப றியலூர்க்
குறையாத மறைநாவர் குற்றேவல்
ஒழியாத கொகுடிக் கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே.

7.30.8
307

சங்கேந்து கையானுந் தாமரையின்
மேலானுந் தன்மை காணாக்
கங்கார்ந்த வார்சடைகள் உடையானை
விடையானைக் கருப்ப றியலூர்க்
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள்
பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில்
எங்கோனை மனத்தினால் நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே.

7.30.9
308

பண்டாழின் இசைமுரலப் பன்னாளும்
பாவித்துப் பாடி யாடிக்
கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம்
பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க்
குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும்
புறங்கூறுங் கொகுடிக் கோயில்
எண்டோளெம் பெருமானை நினைந்தபோ
தவர்நமக் கினிய வாறே.

7.30.10
309

கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம்
மிடர்தீர்க்குங் கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும்
பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினா
லன்புசெய் தின்ப மெய்தி
மலைமலிந்த தோள்ஊரன் வனப்பகையப்
பன்னுரைத்த வண்ட மிழ்களே.

7.30.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தவீசுவரர்,
தேவியார் - கோல்வளைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page