|
289 |
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.1 |
290 | ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.2
|
291 | பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.3
|
292 | வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.4
|
293 | வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.5
|
294 | பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.6
|
295 | போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை
நோந்தன செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.7
|
296 | மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.8
|
297 | படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.9
|
298 | வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. | 7.29.10
|